யாழில் இறைச்சி சாப்பிட்ட பெண் ஆசிரியை பலி! 12 பேர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இறைச்சி உட்கொண்ட ஆசிரியை ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மகாதேவன் சிகேந்தினி (வயது-35) என்ற முன்பள்ளி ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கோண்டாவில் வடக்கு பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு உணவாக கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த இரவு உணவை உட்கொண்ட சிலருக்கு வயிற்றோட்டம் மற்றும் வாந்திபேதி திடீரென ஏற்பட்டதன் காரணமாக அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக அப்பகுதி பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரப்பிரிவினர் 30 ஆம் திகதி காலை அப்பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஒரு வீட்டில் 4 பேர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக யாழ் போதனாவைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிமூலம் பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்பகுதியில் இருந்த ஏனையவர்களும் வயிற்றோட்டம் காரணமாக தாமாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அதில் மேற்குறிப்பட்ட பெண்ணும் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.

மேலும் 12 பேர் தொடர்ந்தும் யாழ் போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக சுகாதார பரிசோதகரிடம் கேட்ட போது, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதில் இருவகையான இறைச்சியை உண்டவர்களுக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் இன்னும் எமக்கு அறிவிக்கப்படவில்லை. அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என பொதுச்சுகாதாரபரிசோதகர் தெரிவித்தார்.
Previous Post Next Post