யாழில் விடுதிக்குள் திடீரெனப் புகுந்த இராணுவம்! 41 இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்று இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள குறித்த விருந்தினர் விடுதிகளில் நுற்றுக்கணக்கான இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் கூடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலம் உள்ள குறித்த விடுதி நி;ர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உள்ளுர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக் கொண்டிருந்தபோது இராணுவத்தினர் வருகை தந்தனர்.

சற்று நேரத்தில் வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்சனும் வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன்.

சிசிரிவி பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிட முடியும் என்று தெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்களே உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் அங்கு உணவு எடுத்துக் கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை என்று விடுதியின் உரிமையாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்தார்.

Previous Post Next Post