யாழ்.பல்கலையில் பகிடிவதை! எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் முழு விபரம்!!

அளவுக்கதிகமான பகிடிவதைகள், தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் என நீண்டு செல்கிறது யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுக்கான தொந்தரவுகள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து இணையங்கள், சமூகஊடகங்கள் என்பன கொதித்தெழுந்திருந்தன.

அதன் விளைவு, பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மாணவர் நலச்சேவை உதவி பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல்,

மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ் அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை பொலிஸாரின் இணைய வழிக் குற்றங்கள் பிரிவின் ஊடாக விசாரணை நடத்துதல் மற்றும்,
மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்தா மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உள்ளிட்ட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான வளாகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கூட்டத்திலேயே மேற்குறித்த முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். அவர் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்று இது தொடர்பில் நேரில் ஆராயவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று வரும் செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்ற பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

இது தொடர்பில் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post