அல்லைப்பிட்டி விவசாயி கிரிஷனை நேரில் சென்று சந்தித்த இந்தியத் துணைத் தூதுவர்! (வீடியோ)

யாழ்.தீவகம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இயற்கையான முறையில் செய்கை செய்யப்பட்ட நெல் விளைச்சலை இந்தியத் துணைத் தூதுவர் கே.பாலச்சந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிஷன் என்ற விவசாயி இயற்கை முறைகளைப் பயன்படுத்தி, பாரம்பரியமான பொரும்போக நெற் செய்கையை மேற்கொண்டிருந்தார்.

இதன் பெறுபேறுகள் வெற்றியடைந்திக்கின்ற நிலையில், அதனை இந்தியத் துணைத் தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டார். இயற்கை விவசாயிக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இயற்கை விவசாயியான கிரிஷன், பாரம்பரிய விதை நெல் இனங்களான மொட்டைக்கறுப்பன் போன்ற நெல் இனங்களை இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி பயிர்ச் செய்கை மேற்கொண்டிருந்தார்.

இயற்கை விவசாயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்தியத் துணைத் தூதுவர் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இரசாயனமற்ற மரக்கறிகள், கீரை வகைகளை உற்பத்தி செய்யும் கிரிஷன், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி இலக்கம் - 384 என்ற முகவரியில் அல்லை விவசாயி என்ற இயற்கை விவசாய மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றையும் நடாத்தி வருகின்றார்.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தையில், அல்லை விவசாயி கிரிஷனின் இலைக்கஞ்சி பொதுமக்களிடையே வரவேற்பினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post