
தியதலாவ, கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி இரவு தனியார் நிறுவன நேர்காணலுக்காக கொழும்பு வந்தடைந்த குறித்த இளைஞர், அதிவேக நெடுஞ்சாலை வழியாக மாகும்புர போக்குவரத்து நிலையத்தை அடைந்தார்.
அங்கிருந்து நுகேகொடையிலுள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளார்.
பயணத்தின் போது, சாரதியின் நண்பர்கள் எனக் கூறிக்கொண்ட மூவர் அடுத்தடுத்து முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர்.
சிறிது தூரம் சென்றதும், அந்த நான்கு பேரும் இணைந்து இளைஞரைக் கடத்த முயன்றுள்ளனர். முச்சக்கர வண்டி பொலிஸ் வீதித் தடை ஒன்றைக் கடந்து சென்றபோது, சுதாரித்துக்கொண்ட இளைஞர் சத்தமிட்டு உதவி கோரினார்.
அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு இளைஞரை மீட்டனர். எனினும், அந்த நேரத்தில் கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து, ஹோமாகம தலைமையக பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். தேடுதல் நடவடிக்கை பிறகு, 24 மணி நேரத்திற்குள் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 46 முதல் 50 வயதுக்குட்பட்ட, மாலபே மற்றும் கிருலப்பனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் நீண்டகாலமாகப் பணத்திற்காக மக்களைக் கடத்தும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.