இலங்கையில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த நான்கு பேர்!

உலகத்தை உலுக்கிக் கொண்டிலுக்கும் கொரோனா வைரஸ் தற்போது இலங்கையையும் முடங்க வைத்துள்ளது.

இந் நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் சில பரிசோதனைகளின் பின்னர் குறித்த நான்கு பேரும் வீடு திரும்புவார்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு நோயாளிகளை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்பு வைரஸிலிருந்து முற்றாக விடுபட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட நோயாளர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உறுதி செய்யப்பட்ட ஏனைய நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 77ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 245 பேர் கொரோனா தொற்றியிருப்பதாக சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எதிர்வரும் 14 நாட்களுக்கு நாட்டை மூட வேண்டிய அவசியங்கள் இருப்பதாக சில மருத்து தரப்புகள் குறிப்பிடுகின்ற நிலையில், பொது மக்களை ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ராமக வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் நெஞ்சு வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த நோயாளி வைத்தியர்களை ஏமாற்றியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த நபருக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post