இரு வாரங்கள் காலக்கெடு! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் கோர முகத்தை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இலங்கை மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என எதிர்கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்களுக்கு மருத்துவர் விஷ்ணு சிவபாதம் அவர்களினால் வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

தனது முகநூலில் இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை கீழே தருகின்றோம்.

அவதானமாக இருப்போம் சேர்ந்தே எதிர்கொள்வோம்.
அவதானம்!

நாம் இப்போதிருந்து இன்னும் இரு வாரங்களுக்கு நோய்ப்பரவுகையின் உச்சக்கட்டத்தில் இருக்கப்போகிறோம். வரப்போகும் இருவாரங்களே நோயின் போக்கை இலங்கையில் தீர்மானிக்கப் போகின்றன.

அதாவது நோயரும்பு காலம் ( incubation period) முடிவடைந்து, கொரோனாவின் கோரமுகம் தெரியவிருக்கும் வாரங்கள் இவை! இப்போது வரை ( அதாவது இரண்டாவது நோயாளி இனம் காணப்பட்டதில் - 11.03.20 இருந்து) 106 பேருக்கு மட்டுமே பொசிட்டிவ் ஆகியிருக்கின்றது- இது ட்ரெயிலர் மாத்திரமே.

தற்போது 85000+ நோயாளர்களையும், 1300+ இறப்புகளையும் சந்தித்துள்ள அமரிக்காவில், முதல் இருவாரங்களில் அடையாளம் காணப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா? வெறும் 134 பேர் ரூ இறப்புகள் 00. அடுத்த இருவாரங்களுக்குள் மேற்படி புள்ளிவிபரம் அங்கு எட்டப்பட்டுவிட்டது..!

வளர்ச்சியடைந்த நாடுகளாலேயே சமாளிக்க முடியாத இந்நிலையை, வெறும் 500 ICU கட்டில்களை வைத்துக்கொண்டு நம்மால் எதிர்கொள்ளவே முடியாது. வருமுன் காப்பது ஒன்றே நம்முன் இருக்கும் ஒரே வழி!

இதுவரை செய்த கோமாளித்தனங்கள், மெத்தனப் போக்குகள் எல்லாம் போதும்! இதற்கு முன் நாம் சந்தித்த ஊரடங்குகளில் இருந்து இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டது.

இது நம்மை, நம் குடும்பத்தை, நம் ஊரை, நம் நாட்டை பாதுகாக்க மட்டுமே போடப்பட்டுள்ளது. பொலிசுக்கு வெட்டுக்காட்டுவது, உள் ஒழுங்கைகளால் ஓடித்திரிவது எல்லாம் வீரதீரமாகாது. பிடிபட்டால் பிணையும் இல்லை, பின்னி எடுத்து விடுவார்கள்.

உணவும், மருந்துமே பிரதான பிரச்சனைகளாகப் போகின்றன. இதயநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், வாராவாரம் டயலைசிஸ் செய்வோர் - பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளப்போகிறார்கள்.

அரசும், மருத்துவ சங்கமும் இணைந்து உங்களுக்கான மருந்து ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதைத்தவிர நீங்களாக பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

விபத்துகள், வீட்டுவன்முறைகள் - வேண்டாமே.. குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நேற்றும் 36 பனடோலை விழுங்கிவிட்டு ஒரு பெண் வந்திருந்தார்.

என்னத்த சொல்ல!! பணத்தை உண்ணமுடியாது என்ற உண்மை இப்போது தெரிந்திருக்கும்..! இருக்கும் கையிருப்பை வைத்து சமாளிக்கப் பாருங்கள். ஒருநேரம் சாப்பாடு குறைந்தால் சாகமாட்டோம்! நீங்கள் சாப்பிடும்போது உங்கள் அயலவரையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.. அடுத்தவீட்டில் அடுப்பெரியாவிட்டால், உங்கள் அகப்பைகள் அங்கும் கொஞ்சம் நீளட்டும்!!

இளைஞர் அமைப்புகளின் சேவை சொல்லற்கரியது. உங்கள் சேவையை தொடருங்கள், அதேவேளை பாதுகாப்புடன் இருங்கள்! ஏப்ரல் 10 ம் திகதி வரை ஒவ்வொருவரும் சிறந்த, சுயகட்டுப்பாடான பிரஜைகளாக நடந்து கொள்வோம். அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

வீட்டிலேயே இருங்கள்.
வீட்டிலேயே இருங்கள்.
வீட்டிலேயே இருங்கள்.

தெருவில் அநாவசியமாக நடமாடுவோரைக் கண்டால் அலட்சியப் படுத்தாமல், வீடுகளுக்கு திரும்பச் சொல்லுங்கள். முரண்டுபிடித்தால், யோசிக்க வேண்டாம், பொலிசில் போட்டுக் கொடுங்கள்.

வரும் இருவாரங்களே நம் இருப்பைத் தீர்மானிக்கப் போகின்றன. இந்த இருவாரங்களை தாண்டிவிட்டோமானால் உலகிலேயே கொரோனாவுக்கு பாதுகாப்பான நாடாக நமது நாடு விளங்கப் போகின்றது!

புதுவருடத்திற்கு மருத்துநீர் வைக்கப் போகின்றோமா,  மரணக்கண்ணீர் சொரியப் போகின்றோமா?? நாமே தீர்மானிக்க வேண்டும்.! அச்சப்படத் தேவையில்லை..! எச்சரிக்கையாக இருந்தால் போதும்!! தனித்திருப்போம். தள்ளியிருப்போம். சேர்ந்தே எதிர்கொள்வோம்!
Previous Post Next Post