பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு! பிணவறையாக மாறியது சர்வதேச சந்தைக் கட்டடம்!!

உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ், நாளாந்தம் பல்லாயிரம் மனித உயிர்களைக் காவு கொண்டு வருகின்றது.

இந் நிலையில், பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒருநாளில் உயிரிழந்தவர்களின் அதிகபடியாக எண்ணிக்கை இதுவென கவலை வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 509 மரணங்கள் பதிவான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் வைத்தியசாலைகளிள் இறந்துள்ளதாகவும் அண்மைக் காலங்களில் வயோதிபர் பராமரிப்பு நிலையங்களில் 884 பேர் இறந்துள்ளதாகவும் பிரதம வைத்திய ஆலோசகர் Director General of Health, Jérôme Salomon தெரிவித்தார்.

பிரான்ஸில் வைரஸ் தாக்கம் காரணமாக 59 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 400 பேர் பூரண குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 387. ஆபத்தான நிலையில் 6 ஆயிரத்து 399 பேர் உள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில், பிரான்ஸ் சர்வதேச சந்தையின் ஒரு பகுதி கட்டிடம் பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து இந்த புதிய பிணவறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பயன்படுத்த காவல்துறையினரால் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இன்று (02.04.2020) கட்டிடத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த 4000 சதுர மீற்றர் கட்டிடத்தில் 700 கட்டில்கள் வரை உருவாக்க போதிய இடைவெளி உள்ளதாகவும் 5°C குளிரில் இந்த பிணவறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் பிணவறையாக பயன்படுத்துவது இது முதல் தடவையல்ல. கடந்த 2003 ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்த கட்டடம் பிணவறையாக பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச் சந்தை மூலம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளுக்கும் மரக்கறி, மீன், இறைச்சி உட்பட அனைத்துவிதமான உணவுப் பொருட்களும் சென்றடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post