மண்டைதீவு, அல்லைப்பிட்டிப் பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் மிகப்பெரும் புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டு கொழும்புக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எனினும் அந்தப் புள்ளியின் உடமையில் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்படாததால் கைது செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு அண்மையக்காலமாக கஞ்சா போதைப்பொருள் வரத்து அதிகரித்துள்ளது. இதில் வடமராட்சி கிழக்குத் தொடக்கம் சுழிபுரம் வரையான கடல் பகுதிகள் ஊடாகவே யாழ்ப்பாணம் குடாநாட்டுக்கு கஞ்சா போதைப்பொருள் இந்தியாவிலிருந்து எடுத்துவரப்படுவது வழமை.


எனினும் கடந்த சில மாதங்களில் முற்பகுதியிலிருந்து மண்டைதீவுப் பகுதியில் 600 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரச புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் முக்கிய புள்ளி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்புக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சுலக்ஸன் என்பவர் அண்மைக்காலமாக மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதியில் நடமாடுகின்றார். அவர் கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான மாடி வீடுகளுக்கு உரிமையாளராகவும் உள்ளார்.

அண்மைக்காலமாக மண்டைதீவுப் பகுதிக்கே அதிகளவு கஞ்சா போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளன. நேற்றும் 111 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 50 கிலோ கிராம் கஞ்சா பொதி கடலில் மிதந்து வந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டது. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணக் குடாநாட்டு கஞ்சா போதைப்பொருளை வியாபாரம் செய்யும் முக்கிய புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது” என்று அரச புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post