முன்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழப்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 15ஆம் திகதி மோசமடைந்தது. இதனையடுத்து, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையிலேயே, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, 1946ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடல் பாடி வருகின்றார்

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள அவர், உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011ம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. 2016ம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

இதேவெளை தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் பல பாடல்கள் அவர் குரலை சொந்தமாகிக் கொண்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் வட மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருந்ததுடன், இலங்கை தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சிறப்பான ஓர் உறவை கொண்டிருந்தார்.

இவரின் இழப்பானது அவரது குடும்ப உறுப்பினர்களை தாண்டி இசை உலகையும் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள அதேவேளை, தமிழினத்திற்காக இசை மூலமாக அவர் செய்த சேவை இனி கிட்டாது என்பதை எண்ணி தற்போது தமிழினமே பெருந்துயரில் ஆழந்துள்ளது.

சங்கீதத்தின் ஜாம்பவானாக திகழ்ந்த மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது சக கலைஞர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் தோள் கொடுத்து தன் மனிதத்தை நிரூபித்தவர் என்பதை அனைவரும் அறிவர்.

இவ்வாறான தூய்மை உள்ளம் கொண்ட பாடும் நிலாவின் உயிர் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்துள்ளமையானது அனைவரையும் பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
Previous Post Next Post