பிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்! அறிவித்தார் அதிபர் மக்ரோன்!!

 


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரெஞ்சு அரசுத் தலைவர் மக்ரோன் மீண்டும் தேசிய அளவிலான பொது முடக்கத்தை (reconfinement national) இன்று அறிவித்திருக்கிறார். இதன்படி வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் டிசெம்பர் முதலாம் திகதிவரை ஒரு மாத காலம் அமுலில் இருக்கும். 

வைரஸ் பரவலின் தொடக்கத்தில் அமுல் செய்யப்பட்டதை விடத் தளர்வானதாக - பள்ளிகளும் தொழிற்துறைகளும் தடையின்றி இயங்கக் கூடிய வகையில்- இரண்டாவது பொது முடக்கம் நடைமுறைக்கு வருகிறது.

ஆனால் முதல் தடவை பொது முடக்கத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருந்த உணவகத்துறை இம்முறையும் இழுத்து மூடப்படுகிறது.

உணவகங்கள், அருந்தகங்கள்(Les bars, restaurants) மற்றும் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள்(commerces non-essential) என்பன மீண்டும் மூடப்படும் என்ற தகவலை மக்ரோன் தனது உரையில் அறிவித்தார்.

ஆரம்ப பள்ளிகள், இடைநிலை, உயர் நிலைக் கல்லூரிகள் உட்பட பாடசாலைகள் வழமை போல இயங்கும். அவை அனைத்தும் தற்போதைய விடுமுறைக்குப்பின் நவம்பர் 2ஆம் திகதி திறக்கப்படும். 

பொது நிர்வாக சேவைகள் (services publics), தொழிற்சாலைகள்(usines), விவசாயத்துறை (exploitations Agricole), கட்டுமானம்(BTP) போன்ற தொழிற்றுறைகள் தொடர்ந்தும் சுகாதார விதிகளுக்கு அமைய இயங்க முடியும்.

ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான எல்லைகள் திறந்திருக்கும். ஆனால் நாட்டுக்குள் பிராந்தியங்களுக்கு இடையே தகுந்த காரணம் இன்றிப் போக்குவரத்துச் செய்வது கட்டுப்படுத்தப்படும்.

மக்களது நடமாட்டங்கள் முதலாவது பொது முடக்க காலப்பகுதியில் நடைமுறையில் இருந்தது போன்று அனுமதிப் படிவ முறை மூலம் கட்டுப்படுத்தப்படும்.எனினும் தற்சமயம் விடுமுறையில் சென்றவர்கள் தடையின்றி இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியும். 

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு, மருத்துவரிடம் அல்லது மருந்தகத்துக்கு செல்வதற்கு, தொழில் இடத்துக்கு சென்றுவர, சிறுவர்கள், குழந்தைகளுடன் சேர்ந்து செல்வதற்கு, வீட்டுக்கு அருகே காற்று வாங்குவதற்கு, வலுவிழந்தோருக்கு உதவுவதற்கு போன்ற காரணங்களின் நிமித்தம் அனுமதிப்பத்திரத்துடன் நடமாட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
அதிபர் மக்ரோன் இன்றைய தனது உரையில் வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான மேலதிக விளக்கங்களை பிரதமர் நாளை வியாழக்கிழமை பிற்பகல் செய்தியாளர் மாநாட்டில் விரிவாக அறிவிக்கவுள்ளார். 

வைரஸின் இரண்டாவது அலை மிக மோசமானதாக இருக்கும் என்று தனது உரையில் மக்களை எச்சரித்திருக்கும் மக்ரோன், இயன்றவரை சந்திப்புகளைத் தவிர்த்துக் கொண்டு வீடுகளில் தங்கி இருக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

"மனவருத்தத்துக்குரியது என்ற போதிலும் நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டுத் தனித்திருங்கள்" என்று அவர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். 

முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அதிபரின் உரை இன்றிரவு எட்டு மணி முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post