பிரான்ஸில் தோற்றுப் போனது உள்ளிருப்பு! வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழர்கள்!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ், ஈழத் தமிழர்களை அதிகம் வாழ வைத்துக் கொண்டிருக்கும் நாடு. அங்கு லாச்சப்பல் எனும் இடம் தமிழர்களின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களின் மிகப் பெரிய வர்த்தக வலயமாக அது திகழ்கின்றது.

தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதையும் புரட்டிப் போட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கத்தினால் பலதரப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிக்கின்றது. அதில் உள்ளிருப்பு என்பது ஒரு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் இந்த உள்ளிருப்பு நடவடிக்கை என்பது தற்போது தோற்றுவிட்டதாகவே மருத்துவத் துறையினரின் கருத்தாகவுள்ளது.

கொரோனாவின் முதலாம் அலையில் அமுல்படுத்தப்பட்ட உள்ளிருப்பை விட தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் உள்ளிருப்பு நடவடிக்கைகள் என்பது பெரும் தளர்வுகளை கொண்டதாக அமைந்துள்ளது.

பொருளாதாரத்தைத் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பல துறைகளிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதேவேளை இந்த உள்ளிருப்புக் காலப் பகுதியில் அதிகளவான கொரோனாத் தொற்றுக்களும் நாளாந்தம் நானூறைத் தாண்டும் உயிரிழப்புக்களும் உள்ளிருப்பு தோற்றுவிட்டதையே எடுத்துக் காட்டுகின்றது.

இது இவ்வாறிருக்க இந்த உள்ளிருப்பு நடவடிக்கையின் போது பிரான்ஸில் உணவகங்கள் மற்றும் சிறு வர்த்தக நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. இந் நிலைமையே தமிழர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. அதாவது பிரான்ஸில் உள்ள அதிகளவான தமிழர்களின் வேலை வாய்ப்பென்பது உணவகத்தையும் சிறு வர்த்தக நிலையத்தை நடாத்துவதிலும் தங்கியுள்ளது.

இதனால் உணவகங்களில் பணியாற்றுபவர்களினதும் சிறு வர்த்தக நிலையங்களை நடாத்துபவர்களினதும் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் விசா இன்றி பணியாற்றிய எத்தனையோ தமிழர்களின் நிலைமை கவலைக்குரியதாகி விட்டது.

விசா இன்றி பிரான்ஸில் உள்ளவர்கள் தமிழர்களின் சிறு வர்த்தக நிலையங்களிலும் உணவகங்களிலுமே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்த உள்ளிருப்பு நடவடிக்கைகள் இவர்களைப் பாரியளவில் பாதிப்படையச் செய்துள்ளது.

வதிவிட உரிமையுள்ளவர்களுக்கு அரச தரப்பால் வழங்கப்படும் உதவித் தொகைகள் ஓரளவுக்கு அவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பை நிவர்த்தி செய்தாலும், விசா இல்லாதவர்கள் நிலைமை என்பது பாரிய திண்ட்டாட்டமாகத்தான் உள்ளது.

பிரான்ஸில் கடைகள் நடத்தி பெரும் பண முதலைகளாக இருக்கும் எத்தனையோ தமிழ் முதலாளிகள், இவ்வாறு விசா இல்லாதவர்களின் இரத்தத்தைக் கசக்கிப் பிழிந்து தங்கள் வயிற்றை வளர்த்தவர்கள்தான்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் விசா இன்றி, வேலையிழந்து, வாழ்வாதாரத்துக்குப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்த முதலாளிகள் தற்போதாவது அவர்களின் உணவுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்களா என்பதும் கேள்விக்குறியே.

இச் சந்தர்ப்பத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவிகள், இவ்வளவு காலமும் அவர்களுக்கு நீங்கள் செய்த அநியாயத்துக்கு பரிகாரமாகவும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

இவ்வாறு தோற்றுப் போன உள்ளிருப்பு நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் தமிழர்கள் என்பது கவலைக்குரிய விடயமே.

இதேவேளை பிரான்ஸில் சிறு வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதியளிக்குமாறு கோரி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

பயோ நகரின் ஆட்சியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500ற்கும் மேற்பட்ட சிறு வர்த்தகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நத்தார் பண்டிகையின்போதுதான் தங்களின் வியாபாரம் சூடுபிடிக்கும் என்றும், தங்களின் வருட வருமானத்தின் பெரிய தொகையை இந்தக் காலப் பகுதியிலேயே தாங்கள் பெற்றுக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post