யாழ்ப்பாணம் உடுவிலில் 9 வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று! (இரண்டாம் இணைப்பு)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் 9 வயதுச் சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் இன்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய தாய் மற்றும் மூன்று பிள்ளைகளும் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் நால்வரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.

அவர்களில் 9 வயதுச் சிறுமிக்கே கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 வயது மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post