பிரான்ஸ் இளையோர் வீடியோ பதிவில் யாழ்.பல்கலைக்கழக தூபி தகர்ப்பு விடயம்! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்ட சம்பவமும் அதனால் வெடித்த தமிழர் எதிர்ப்பு நிகழ்வுகளும் உலக அளவில் இளையவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.

ஜரோப்பாவில் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுவிளங்கும் HugoDécrypte யூரியூப் வீடியோ செய்தியில் நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக சம்பவமும் அதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளும் ஒளிபரப்பாகி உள்ளன.

பிரான்ஸின் இளம் ஊடகவியலாளரும் இணைய வீடியோ வடிவமைப்பாள ருமாகிய ஹியூகோ ட்ராவேர்ஸ் (Hugo Travers) வாசித்து அளித்த செய்திப் பதிவிலேயே யாழ். பல்கலைக்கழக விவகாரம் நேற்று முக்கிய இடம்பெற்றிருந்தது.

அண்மைக்காலத்தில் தனது குறுகிய வீடியோ செய்திப் பதிவுகளால் மில்லியன் கணக்கில் இளைய தலைமுறையினரைக் கவர்ந்தவர் ஹியூகோ ட்ராவேர்ஸ்.

யூரியூப் சமூகவலைத்தளத்தில் "ஹியூகோ டெக்ரிப்டே" ("HugoDécrypte") என்னும் பெயரில் அவர் நடத்துகின்ற வீடியோ செய்தித் தொகுப்பிலேயே முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு தொடர்பான விடயங்கள் ஒளிபரப்பாகி உள்ளன.

ஹியூகோ ட்ராவேர்ஸ் 1997 இல் பிரான்ஸில் பிறந்தவர். பிரெஞ்சு - இங்கிலாந்து இரட்டைப் பிரஜையான அவர் சிறிய வீடியோ பதிவுகள் ஊடாக இளையோர் மத்தியில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு HugoDécrypte யூரியூப் சனலை 2015 ஆம் ஆண்டில் தொடக்கினார்.

கடந்த ஆண்டு அதன் பயனாளர்களது எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது.

2019 இல் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அதிபர் மக்ரோன் இளையவர்களின் கேள்விகளுக்கு பதுலளிப்பதற்காக HugoDécrypte வீடியோ தளத்துக்கு செவ்வி வழங்க முன்வந்திருந்தார்.மரீன் லூ பென் உட்பட பல பிரெஞ்சு அரசியல் பிரமுகர்களது செவ்விகளையும் HugoDécrypte ஒளிபரப்புச் செய்துள்ளது.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான நேற்றைய அதன் செய்திப் பகிர்வை பிரான்ஸில் பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
Previous Post Next Post