கனடாவில் ரோஜர்ஸ் மற்றும் பீடோ அலைபேசி, இணைய சேவைகள் முடக்கம்!


கனடா முழுவதிலும் உள்ள ரோஜர்ஸ் (Rogers) மற்றும் பீடோ ( Fido) நிறுவனங்களின் தந்தியில்லா அலைபேசி மற்றும் இணைய சேவைகள் இன்று திங்கட்கிழமை செயலிழந்துள்ளன.

இதனால் பெரும்பாலான கனேடியர்கள் கைப்பேசி அழைப்புக்களை எடுக்கவும் இணையதளங்களை அணுகவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சேவைகள் செயலிழந்துள்ளதாக பெரும்பாலான முறைப்பாடுகள் ஒன்ராறியோவில் இருந்து வெளியாகியுள்ளன.

எனினும் பிரிட்டிஷ் கொலம்பியா முதல் பிரின்ஸ் எட்வர்ட் தீவு வரையிலான மாகாணங்களிலும் ரோஜர்ஸ் அலைபேசி மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தங்கள் சேவையில் ஏற்பட்டுள்ள இடையூறுக்கு ரோஜர்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கண்டறித்து அவற்றை சீர் செய்யும் பணியில் தங்கள் குழுவினர் துரித கதியில் செயற்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை, பிடோ இணைய சேவைகளும் முடங்கியுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் சேவைகள் எப்போது வழமைக்குத் திரும்பும் என்பது குறித்து இதுவரை எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, இணைய சேவை செயலிழப்பால் ஒன்ராறியோ மக்கள் 911 அவசர சேவை தொடர்புகளை ஏற்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அவசர சேவைக்கு அழைக்க கைத்தொலைபேசிக்கு மாற்றீடாக நிலையான தந்தித் தொடா்பு தொலைபேசி சேவையை பயன்படுத்துமாறு ஒன்ராறியோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கனேடியர்களின் கோவிட்19 தடுப்பூசி முன்பதிவு நடவடிக்கைகளும் இந்த சேவை செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post