அமெரிக்கன் மிஷன் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆதனப் பிரச்சினை! தீர்ப்பளித்தது நீதிமன்றம்!!


அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் பிணை முறிக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

கல்லூரியின் மாணவர்களுக்கான உணவுத் திட்ட சமையல் பகுதி மற்றும் துவிச்சக்கர வண்டித் தரிப்பிடம் அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது.

தமக்கே சொந்தம் என சட்ட ரீதியான ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் வைத்துள்ளனர். அத்துடன் அமெரிக்க மிஷனின் அத்துமீறல்கள் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி கல்லூரி மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமது சபைக்கு சொந்தமான காணி எனவும் அங்கு துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் என கூறி மாணவர்களுடன் முரண்பட்டு மாணவர்கள் மீது அமெரிக்க மிஷனைச் சேர்ந்த சிலர் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

அதனையடுத்து அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என அமெரிக்க மிஷன் அருட்தந்தையர்கள் இருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிஸாரால், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சார்பில் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட அருட்தந்தையர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

“பாடசாலையின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சமையல் பகுதி அமைந்துள்ள காணியில் மாணவர்களின் துவிச்சக்கர வண்டி தரிப்பிடமும் உள்ளது. அந்த ஆதனம் கல்லூரியின் பயன்பாட்டில் உள்ளமைக்கு அரச வர்த்தமானி அறிவிப்பும் உள்ளது” என்று சமர்ப்பணம் செய்த மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், ஆவணங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

அருட்தந்தையர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் தமது ஆட்சேபனையை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து கட்டளையிட்டு வழக்கை முறிவுறுத்தியது.

அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, கட்டளை 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டியது.

அதனால் அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் பிணை முறிக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதேவேளை, மல்லாகம் நீதிமன்ற கட்டளை மீது மேன்முறையீடு செய்யவோ அல்லது குடியியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவோ அமெரிக்க மிஷனுக்கு உரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post