செங்குந்த இந்துக் கல்லூரி விளையாட்டு மைதான விவகாரம்! இழுபறிக்குப் பின் ஒப்பந்தம் கைச்சாத்து!! (படங்கள்)

யா/செங்குந்த இந்துக் கல்லூரிக்கும் நொதேண் விளையாட்டுக் கழகத்திற்கும் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்குமான விளையாட்டு மைதானம் தொடர்பிலான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 21.06.2021 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச உயர் அதிகாரிகள் முன்னிலையில் கைச்சாத்தானது.

கடந்த சுமார் 50 வருடங்களாக பரஸ்பர நம்பிக்கைகளின் அடிப்படையில் எந்தவிதமான எழுத்து வடிவிலான உடன்படிக்கைகள் எதுவுமின்றி பூரண மனசுத்தியுடன் கல்லூரியினாலும் கழகத்தினாலும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் விட்டுக்கொடுப்புகளுடனும் பாவிக்கப்பட்டுவந்த மைதானம் தொடர்பில் சிலரினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பகரமான சூழ்நிலைகளிலிருந்து மீண்டு முன்னைய பரஸ்பர நம்பிக்கைகளினை மீளவும் கட்டியெழுப்புமுகமாக குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கடந்த 13.02.2020 ஆம் திகதிய உயர்மட்ட அரச அதிகாரிகள் முன்னிலையில் எட்டப்பட்ட நிரந்தர தீர்வுகளுக்கான தீர்மானங்களின் அடிப்படையில் பல தடைகளையும் தாண்டி அரச மற்றும் அரசியல் தலைமைகளின் ஆசியுடன் வெற்றிகரமாக கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் நொதேண் விளையாட்டுக் கழக போசகரும் யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் அதிபருமான ந.கந்தவனச்செல்வன். நொதேண் விளையாட்டுக் கழக தலைவர் க.நிஷாகரன், சட்டநாதர் சிவன் ஆலய தர்மகர்த்தா டாக்டர்.க.செந்தில்குமரன், 

மேலும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர்செ.உதயகுமார்,  யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம், நொதேண் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினரும்  யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளருமான கை.சங்கரலிங்கம், நொதேண் விளையாட்டுக் கழக செயலாளர் க.மதீசன், யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இ.ஜெசிந்தரூபன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் க.மயூரன், நொதேண் விளையாட்டுக் கழக உப போசகரும் யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் உடற் கல்வி ஆசிரியருமான சி.பவானந்தன், நொதேண் விளையாட்டுக் கழக உப தலைவரும் யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினருமான க.மாதவன்,  நொதேண் விளையாட்டுக் கழக பொருளாளர் செ.விபூஷன், நொதேண் விளையாட்டுக் கழக உப செயலாளரும் நல்லூர் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினருமான தெ.கிரிதரன், நொதேண் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினரும் யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான லயன் வ.ஸ்ரீதரன், நொதேண் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினரும் யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான க.நாதன், நொதேண் விளையாட்டுக் கழக உறுப்பினரும் யா/செங்குந்த இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினருமான ந.நந்தகுமார், நொதேண் விளையாட்டுக் கழக உறுப்பினர் ஜெ.நிசூதனன் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.Previous Post Next Post