கனடாவில் கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவுகிறது காட்டுத் தீ!


கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது.

தீப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாகாணத்தில் மத்திய மற்றும் கிழக்கு பெரும்பகுதிகளில் வானில் பெரும் புகை எழுந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகள் விசேட காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் யூகோன் வரையிலும், கிழக்கில் அல்பர்ட்டா எல்லை வரையிலும் அடுத்துவரும் நாட்களில் புகைமூட்டம் காணப்படும். அத்துடன், இப்பகுதிகளில் காற்றின் தரம் மோசமானதாக மாறலாம் என கனடா சுற்றுச்சூழல் துறை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் லிட்டன் நகரம் தீவிபத்தால் கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர் மாகாணத்தின் பல பகுதிகள் தொடர்ந்தும் எச்சரிக்கையின் கீழ் உள்ளன. 

ப்ரேசர் கன்யோன் (Fraser Canyon) உட்பட மாகாணத்தின் பல பகுதிகளும் வெப்ப அபாய எச்சரிக்கையின் கீழ் உள்ளன. இங்கு பகல்நேரங்களில் வெப்ப நிலை அதிகபட்சம் 38 டிகிரி செல்கியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ ஆபத்துள்ள பகுதிகளில் மக்கள் எந்நேரமும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கனேடிய மத்திய அரசு தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகிறது. இராணுவ விமானங்களுடன் கனேடிய படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை சுமார் 450 கனேடிய விசேட படையணியினர் ஹெலிகப்டர்களின் துணையுடன் கம்லூப்ஸில் தீயணைப்பு நடவடிக்கைக்கும் உதவும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கனேடிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்தார்.
Previous Post Next Post