“நீங்கலெல்லாம் ரசிகர்களா? எங்களுக்குத் தேவையே இல்லை” இங்கிலாந்து கேப்டன் கடும் சீற்றம்!


சமூக வலைதங்களில் இனவாத கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் கேப்டன் ஹாரி கேன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறைப்படி இத்தாலி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மார்கஸ் ராஷ்போர்ட், ஜடோன் சாஞ்சோ, புக்காயோ சாகா ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட்டின்போது கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனையடுத்து இவர்களை விமர்சிக்கும் விதமாக சமூகவலைத்தளங்களில் இனவெறி கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

சமூக வலைத்தளங்களில் மோசமான பதிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து இங்கிலாந்து அணியின் மேலாளர் கரேத் சவுத்கேட் இன்று காலை இனவாதிகளுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தார்.

அவரை அடுத்து, இப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) தனது ட்விட்டர் பக்கத்தில் இனவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தனது பதிவில் "கடைசியாக போராடிய அந்த மூன்று பேரின் தைரியத்திற்காக அவர்களை நாம் பாராட்ட வேண்டும். மாறாக நேற்று இரவிலிருந்து அவர்களை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்து வருகிறீர்கள்.

நீங்கள் சமூக ஊடகங்களில் ஒருவரை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் எல்லாம் ஒரு இங்கிலாந்து ரசிகர் என்பதற்கு தகுதி அற்றவர்கள், நீங்கள் எங்களுக்கு தேவை இல்லை" என காட்டமாக பதிலளித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜான்சன், வீரர்கள் கதாநாயகர்களாகக் கொண்டாடப்பட வேண்டுமே தவிர, சமூகவலைதளங்களில் இனவெறி கருத்துகளை பதிவிடக்கூடாது, அதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post