நான்காவது கட்டத் தொற்றலைக்குள் நாடு பிரவேசித்துள்ளது! - பிரான்ஸ் அரசு அறிவிப்பு

  • குமாரதாஸன். பாரிஸ்.
கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளுக்கு சட்ட ஆலோசனைச் சபை அங்கீகாரம் டெல்ரா வைரஸ் காரணமாக நாடு நான்காவது கட்டத் தொற்றலைக்குள் பிரவேசித்திருப்பதாக அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் நேற்றைய அமைச்சரிவைக் கூட்டத்தின் இறுதியில் அறிவித்திருக்கிறார்.

நாடளாவிய ரீதியில் நாளாந்தத் தொற்றுக்கள் பத்தாயிரம் என்ற எண்ணிக்கை
யைத்தாண்டி அதிகரித்து வருகிறது. அரச பேச்சாளரது கூற்றுப்படி, மற்ற எல்லா வகைத் திரிபுகளையும் விஞ்சும் அளவில் டெல்ரா வைரஸ் "மின்னல் வேகத்தில்" 80 வீதமான தொற்றுக்களுக்குக் காரணமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

கணிசமான எண்ணிக்கையானோர் தடுப்பூசி ஏற்றி விட்டதால் தொற்றின் தீவிர நோய் நிலை முன்னரைப் போன்று காணப்படவில்லை. மருத்துவமனை அனுமதிகளும் இன்னமும் அதிகரிக்கவில்லை. ஆனால் தடுப்பூசி ஏற்றியோரது எண்ணிக்கை பெரும் ஆபத்தைத் தணிக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என்று அரசு கூறுகிறது.

தீவிர தொற்று வலயங்களாக பாரிஸ் உட்பட 36 மாவட்டங்கள்

நாட்டில் உல்லாசப் பயணிகள் கூடுகின்ற கரையோர மாவட்டங்கள் மற்றும் பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் அடங்கலாக 36 மாவட்டங்கள் பெரும் தொற்று அதிகரிப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்திலாந்திக், மத்தியதரை கடற்பகுதிகளை எல்லைகளாகக் கொண்ட கரையோர மாவட்டங்களிலேயே பரவல் தீவிரமாக உள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்த சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன், நாடு நான்காவது தொற்றலைக்குள் பிரவேசித்திருப்பதை ஒப்புக்கொண்டார். 

இந்த முறை வைரஸ் இளவயதினரின் தொற்று நோயாக மாறி உள்ளது என்று குறிப்பிட்ட அவர் இளையோர் ஊடாக மூதாளர்களுக்குப் பரவும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம் - என்று எச்சரித்தார். 

டெல்ரா தொற்றுக்களை நான்காவது அலை என்று கூறுவதைவிட "வைரஸ் சுனாமி" என்று அழைப்பதே பொருத்தம் என்று அவர் கூறினார்.
 
இதேவேளை பல பொது இடங்களுக்குள் செல்வதற்கு சுகாதாரப் பாஸை (pass sanitaire) கட்டாயமாக்குகின்ற சட்ட மூலம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டது.

சுகாதாரப் பாஸை நடைமுறைப்படுத்தும் விதிகள் முன்னர் அறிவிக்கப்பட்டபடி
புதன்கிழமை அமுலுக்கு வரும். அந்தத் திகதியில் எந்த மாற்றங்களும் இல்லை என்று கப்ரியேல் அட்டால் அறிவித்தார்.

21 ஆம் திகதி புதன்கிழமையும் பின்னர் ஓகஸ்ட் 30 ஆம் திகதியிலுமாக இரு கட்டங்களாக சுகாதாரப் பாஸ் நடைமுறைக்கு வரவிருப்பது தெரிந்ததே.

சுகாதாரப் பாஸ் கட்டாயமாகப் பேணப்பட வேண்டிய இடங்களில் அது பின்பற்றப்பாடுவதைக் கண்காணிப்பதற்காகப் பொலீஸாரும் ஜொந்தாம் படையினரும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று அரசு அறிவித்திருக்கிறது.

Le Conseil d'État அங்கீகாரம்

நாட்டு மக்களில் ஒரு சாராரது கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கட்டாய சுகாதாரப் பாஸ் சட்ட விதிகளை நாட்டின் சட்ட ஆலோசனைச் சபை (Le Conseil d'État) நேற்றுப் பரிசீலனை செய்து அங்கீகரித்தது .

கட்டாய பாஸ் விதிகளை மீறுகின்ற உணவகங்கள் போன்ற நிறுவனங்கள் மீது விதிக்கப்படவுள்ள அபராதம் மற்றும் தடைகளை ஆராய்ந்த நிபுணர்கள் அபராதத் தொகையை 45 ஆயிரம் ஈரோவில் இருந்து ஆயிரத்து 500 ஈரோக்களாகக் குறைக்குமாறு பரிந்துரைத்தனர்.

ஆரம்பத்தில் ஒருமாத காலப் பகுதிக்குள் அபராதம் அறவிடுவது மிக இறுக்கமாக அமுல்செய்யப்பட மாட்டாது. தளர்வுப் போக்குப் பின்பற்றப்படும் என்று அரச பேச்சாளர் உறுதியளித்துள்ளார். சுகாதாரப் பாஸுடன் உள் நுழைகின்ற இடங்களில் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரைபத்து நாட்கள் கட்டாய தனிமைப் படுத்தலில் வைத்துக் கண்காணிக்கும் விதிகளையும் ஆலோசனைச் சபை ஏற்றுக் கொண்டது. கட்டாய தனிமைப்படுத்தலை அரச மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாகிய l'Assurance Maladie நடைமுறைப்படுத்தும். ஒருவர் தனிமையில் இருப்பதைக் கண்காணிப்பதற்கான காலம் இரவு ஒன்பது மணியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் புதிதாக சட்டங்களை வகுப்பதற்கு முன்பாக அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும், செனற் சபைக்கும் அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குகின்ற சட்ட நிபுணர்கள் அடங்கிய உயர் ஆலோசனைச் சபையே Le Conseil d'État என்று அழைக்கப்படுகிறது.

உத்தேச சுகாதார சட்ட வரைவுக்கு சட்ட ஆலோசனைச் சபையின் அங்கீகாரம்
கிடைத்திருப்பதால் அது அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்திலும் செனற்சபையிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Previous Post Next Post