ஜேர்மனியில் ஒரு நாளில் அதிகூடிய தொற்று! தடுப்பூசி போடாதவர்களுக்குக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
ஜேர்மனியில் வைரஸ் தீவிரமாகப் பரவுவதை அடுத்து அங்கு தடுப்பூசி ஏற்றாதவர்களது நாளாந்த வாழ்வைக் கட்டுப்படுத்தும் விதமான பல விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பதில் சான்சிலர் அங்கெலா மெர்கலுக்கும் நாட்டின் 16 மாநிலங்களது முதல்வர்களுக்கும் இடையே நேற்று நடைபெற்ற அவசர கூட்டத்தின் முடிவிலேயே 2ஜி (2G) என்ற பெயரில் தீவிர கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் மொழியில் "geimpfte","genesene" என்ற இரு சொற்களினதும் முதல் ஜீ(G) எழுத்துக்களையும் குறிப்பதே 2Gஆகும். மருத்துவமனை அனுமதிகளின் வீதத்தைப் பொறுத்து 2G கட்டுப்பாடுகள் இடத்துக்கிடம் வேறுபடும்.

கடந்த ஏழு நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு மூன்று என்ற கணக்கில் ஆஸ்பத்திரி அனுமதிகள் உள்ள இடங்களில் ஆரம்பக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படும்.அதே போன்று மருத்துவமனை அனுமதிகளின் கணக்கைப் பொறுத்து தடுப்பூசி ஏற்றாதோர் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.

தங்களை நோய் எதிர்ப்புக்குத் தயார்ப்படுத்தாதோர் - தடுப்பூசி ஏற்றாதவர்கள்-பொதுப் போக்குவரத்துக்களைப் பயன்படுத்தவும் அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்வதற்கும் வைரஸ் சோதனைச் சான்றிதழ் (negative tests) அவசியமாகும்.

அதேவேளை நாட்டின் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மூதாளர் இல்லங்களில் பணிபுரிவோருக்கும் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது என்ற முடிவும் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

ஜேர்மனி வைரஸ் பரவலின் தீவிரத்துக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. இதுவரை இருந்திராத ஆகக் கூடிய எண்ணிக்கையாக அங்கு ஒரு நாள் தொற்று 65,371 ஆக பதிவாகியுள்ளது. அங்கெலா மெர்கல் பதவியை முடித்து வெளியேறுகின்ற நிலையில் அவர் தனது இறுதி நாட்களில் பெரும் சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.
Previous Post Next Post