ஜேர்மனி ரயிலில் கத்திக் குத்துத் தாக்குதல்!மூவர் படுகாயம்!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
ஐரோப்பிய நாடுகளில் கத்திவெட்டுத் தாக்குதல்கள் வழமையான நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஜேர்மனியின் பவறியா (Bavaria) மாநிலத்தில் கடுகதி ரயில் ஒன்றில் சிரிய நாட்டு அகதி ஒருவர் கத்தியால் தாக்கியதில் பயணிகள் மூவர் படுகாயமடைந்தனர்.

நாட்டின் தெற்குப் பகுதி நகரங்களாகிய Regensburg - Nuremberg இரண்டுக்கும் இடையே அதிவேக ரயில் ஒன்றில் இன்று காலை 09.00 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது.

"பில்ட்" செய்தி நிறுவனத்தின் தகவலின் படி 26,39,60 வயதுகளையுடைய மூன்று ஆண் பயணிகளே படுகாயமடைந்துள்ளனர். கத்தியால் பயணிகளைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். 

27 வயதான அந்த சிரிய நாட்டு அகதி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதல் நடந்த ரயிலில்(ICE) 300 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுப் பொது இடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். 

அதே மார்க்கத்தில் மற்றொரு ரயிலில் பவறியா பொலீஸின் விசேட படைப்பிரிவினர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அதனால் அவர்கள் தாக்குதல் நடந்த ரயிலில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது என்று "பில்ட்" செய்தி ஒன்று தெரிவித்தது.

Regensburg - Nuremberg ரயில் மார்க்கத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஜேர்மனியின் ரயில்வே நிறுவனமாகிய டொச்ச பான் (Deutsche Bahn) தெரிவித்துள்ளது.
 
தாக்குதலாளி 2014 இல் ஜேர்மனிக்கு வந்து புகலிடம் பெற்றவர்.தாக்குதலுக்கு பின்னணியில் பயங்கரவாதச் செயல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பாரிஸ் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் (Gare Saint-Lazare) போக்குவரத்துப் பொலீஸாரைக் கத்தியால் மிரட்டிய நபர் ஒருவர் சுடப்பட்டார்.

மாஸ்க் பரிசோதனைக்காக அந்த நபரை பொலீஸார் விசாரிக்க முற்பட்ட போது அவர் "அல்லாஹூ அக்பர்" எனக் கத்தியவாறு கத்தி ஒன்றை எடுத்துப் பொலீஸாரைத் தாக்க முற்பட்டார் என்று கூறப்படுகிறது."

பிரான்ஸை இஸ்லாமிய தேசமே ஆழ்கின்றது" என்றும் அவர் கூக்குரலிட்டார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Previous Post Next Post