வேகம் கொண்டது கொரோனாப் பாதிப்பு! தனியார் வைத்தியசாலைக்கும் அனுமதியளிப்பு!!

இலங்கையில் மேலும் 8 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று பதிவாகிய 8 பேரும் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்தவ பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சிறப்பு மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

கொரோனா தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அரசின் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை ஊடாகவே பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் தனியார் வைத்தியசாலைகளுக்கு கடும் நிபந்தனைகளுடன் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்தவ பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன் தனியார் வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு கட்டணமாக 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அறிவிட முடியாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post Next Post