யாழில் சகோதரிகளின் கணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு! கிராம மோதலாக மாறியதால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை நடுக்குடத்தனைப் பகுதியில் இரண்டு சகோதரிகளின் கணவன்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கிராம மட்ட மோதலாக மாறிய நிலையில் இரண்டு நாட்கள் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நடுக்குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவரின் கணவன்களுக்கு இடையில் இடம்பெற்ற கருத்துமுரண்பாடு கை கலப்பாக மாறியிருக்கின்றது.

நேற்று ஏற்பட்ட கை கலப்பு இன்று அயல் கிராமத்திலிருந்து வாள்களுடன் நபர்கள் வந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு மிக மோசமாக நடைபெற்றதாக தெரியவருகின்றது.

பரஸ்பரம் கற்களாலும் கொட்டன்களாலும் தாக்கிக்கொண்ட நபர்கள் வீடுகளில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களையும் அடித்து உடைத்திருக்கின்றனர்.

இன்று இன்னொரு கிராமத்தில் இருந்து சென்ற நபர்கள் வாள்களைக் கொண்டு அங்கிருந்தவர்களை தாக்க முற்பட்டதாக தெரியவருகிறது. மோதல்களின் தீவிரத் தன்மை குறித்து குறித்த பகுதி கிராம அலுவலரால் பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதல்களுக்கு உள்ளாகி உட்காயங்கள் மற்றும் சிறு சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்ற அச்சம் காரணமாக வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை என்று குடத்தனையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post