பிரான்ஸில் வதிவிட அனுமதியற்றோரின் பரிதாப நிலை! சொந்த நாட்டுக்குத் திரும்பும் அவலம்!!

பிரான்ஸில் வதிவிட அனுமதியின்றி தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பலரும் தத்தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்பி விண்ணப்பித்து வருகின்றனர்.

சுயவிருப்பின் பேரில் ஊக்குவிப்பு நிதி உதவியுடன் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முன்வருவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்துள்ளது என்ற தகவலை குடியேற்றவாசிகள் தொடர்பான பிரான்ஸின் அலுவலகம்( l'Office français de l'immigration et de l'intégration - Ofii) தெரிவித்திருக்கிறது.அல்பேனியா, ஆர்மீனியா, ஜோர்ஜியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் சுமார் ஆயிரம் பேர், இவ்வாறு சொந்த நாடுகளுக்குத் திரும்ப முன்வந்துள்ளனர்.

முழு உலகையும் பாதித்துள்ள கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பிந்திய நிலைவரம் குடியேற்றவாசிகள் மத்தியிலும் பலத்த தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.இத்தகையோரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில் ஏற்பட்டிருக்கும் நீண்ட தாமதம், போதிய பொருளாதார நலன்கள் கிட்டாமை, சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்காலிக குடியிருப்புகளில் நெருக்கமாகத் தங்கி வாழ்வதில் எதிர்நோக்கும் கஷ்டங்கள், நீண்ட காலம் உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற பல காரணங்களால் இவர்கள் தமது சொந்த நாடுகளில் வாழ்வதே மேல் என்ற முடிவுக்கு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

திரும்பிச் செல்வதற்கு நிதியுதவி கோரி விண்ணப்பிப்போருக்கு பிரான்ஸ் அரசினால் வழங்கப்படும் நிதியின் அளவு நாட்டுக்கு நாடு வேறுபடும். பொது முடக்கத்தின் பின்னர் விமான சேவைகள் மீள ஆரம்பமாகி உள்ளதால் கடந்த 2 ஆம் திகதி ஆர்மீனியர்கள் 17 பேர் விசேட விமானத்தில் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.


இதேபோன்று 53 சிறுவர்கள், 54 வளர்ந்தோர் அடங்கிய 107 அல்பேனியர்கள் தாயகம் திரும்புவதற்காக வரும் வாரம் விமானம் ஒன்று சேவைக்குப் பெறப்படவுள்ளது.

குறியேற்றவாசிகள் தொடர்பான பிரெஞ்சு அலுவலகத்தை ஆதாரம் காட்டி ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன.

Previous Post Next Post