
சிங்கப்பூரை சேர்ந்த ஜோனாதன் மோக் என்ற மாணவர் கடந்த மார்ச் மாதம் பேஸ்புக்கில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு அடிவாங்கி வீங்கி போன கண்களுடன் உள்ள தனது புகைப்படங்களையும் வெளியிட்டியிருந்தார்.
அதில், நான் லண்டனில் தங்கி இரண்டாண்டுகளாக படித்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்னர் இரவு 9.15 மணிக்கு ஆக்ஸ்வெர்ட் தெருவில் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது கும்பலாக ஆண்கள் வந்தார்கள். என்னை பார்த்ததும் அதில் ஒருவன் கொரோனா வைரஸ் என்று கத்தினான்.
பின்னர் அந்த கும்பல் என்னிடம், நீ எப்படி எங்களை பார்க்கலாம் என கூறியவாறே முகத்தில் குத்தினார்கள். அதை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்ற நிலையில், கும்பலை சேர்ந்த ஒருவன், என் நாட்டில் உங்கள் கொரோனா வைரஸ் வருவதை நாங்கள் விரும்பவில்லை என கூறியவாறே மீண்டும் முகத்தில் குத்தினான்.
பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், அங்கு என் முகத்தில் எலும்பு முறிவுகள் இருப்பதாகவும், எலும்புகளில் சிலவற்றை சரிசெய்ய மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.
வெறுமனே, தோலின் நிறம் காரணமாக, எந்தவொரு வடிவத்திலும், உடல் ரீதியான மற்றும் இனவெறி தாக்குதலை நடத்துவது எப்படி சரியாகும்? என பதிவிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவனை மார்ச் மாதம் பொலிசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதன்பின்னர் முக்கிய குற்றவாளியான 15 வயது சிறுவனை கைது செய்தனர், அவன் மீது தற்போது நோக்கம் இல்லாமல் கடுமையான உடல் தீங்கு விளைவித்தல் அல்லது ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபர் ஆகஸ்ட் 10ஆம் திகதி லண்டனில் உள்ள Highbury Corner Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.