பிரான்ஸில் பாரிஸ் உட்பட பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு?எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரிஸ் உட்பட பெருநகரங்களில் இரவு நேர ஊரடங்கு (le couvre-feu) போன்ற புதிய சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டுவர அரசு ஆலோசிக்கிறது.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகம் எடுத்திருப்பதை அடுத்தே தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு அரசு மேல் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று செவ்வாய்க் கிழமை எலிஸே மாளிகையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயமும் ஆராயப் பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார நெருக்கடி மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அதிபர் மக்ரோன் புதன்கிழமை இரவு கலந்து கொள்கிறார். 

இந்த நேர்காணல் நிகழ்ச்சி TF1, France 2 ஆகிய தொலைக் காட்சிகளில் இரவு 7.55 மணிமுதல் ஒளிபரப்பாகும்.

நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸின் இரண்டாவது பேரலையைச் சமாளிக்க அரசு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் இலக்குகளையும் அவர் அச்சமயம் நாட்டுக்குத் தெரியப்படுத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

உயர் தொற்று வலயங்களாக உள்ள பெரு நகரங்களில் இரவு நேர நடமாட்டங்களை முடக்குவதற்கு உள்ளூர் ஊரடங்கு நடைமுறைகளை அமுலுக்கு கொண்டுவருவது அவற்றில் ஒன்று.

அரசுக்கு ஆலோசனை வழங்கிவரும் அறிவியல் நிபுணர் குழு கடந்த செப்ரெம்பர் இறுதியில் இரவு ஊரடங்கை அமுல்செய்யமாறு அரசுக்கு சிபாரிசு வழங்கி இருந்தது. எனினும் அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 

இரவுக் களியாட்டங்கள் (les fêtes nocturnes) குடும்ப ஒன்று கூடல்கள், இளையோரின் உபசாரக் களியாட்டங்கள் போன்றவையே தொற்று தீவிரமாகப் பரவும் இடங்களாக இருப்பதால் இரவு ஊரடங்கு மூலம் அத்தகைய ஒன்று கூடல்களைத் தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.

ஜெர்மனியின் பேர்ளின், பிராங்பேர்ட் பெல்ஜியத்தின் அன்வர்ப் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த இரவு ஊரடங்குக் கட்டுப்பாடு பரீட்சிக்கப்பட்டிருக்கிறது.

ஆயினும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விட நாட்டு மக்கள் அனைவரையும் வேகமாகப் பெருமெடுப்பில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய திட்டங்களே விரைந்து பலனளிக்கும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். 

இதேவேளை தற்போதைய நிலைமை நீடித்தால் இம்மாத இறுதிக்குள் பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 90 வீதமானவை தொற்றாளர்களால் நிறைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மருத்துவமனைகளின் நிலைமையைப் பொறுத்து உள்ளூர் மட்டத்தில் முடக்கங்கள் உட்பட எத்தகைய புதிய கட்டுப்பாடுகளும் சாத்தியம் என்று பிரதமர் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:
குமாரதாஸன்,
பாரிஸ்.
Previous Post Next Post