பிரெஞ்சு மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட"அந்த இரவுக்கு" இன்றுடன் ஓராண்டு நிறைவு!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • குமாரதாஸன், பாரிஸ்.
மார்ச் 16,2020. பாரிஸ் வாசிகளில் பலரும் வணிக வளாகங்களையும் வர்த்தக நிலையங்களையும் நிறைத்து அகப்பட்ட அத்தியாவசியப் பொருள்களை எல்லாம் அள்ளிக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முற்றிலும் புதியதொரு சூழ்நிலை எங்கும் உருவெடுக்கிறது. உலகப் போர்க் காலத்துக்குப் பின்னர் ஒருவித பயம் கலந்த பரபரப்பை முதியவர்கள் உணர்கின்றனர்.

இரவு எட்டு மணி. நாட்டின் அதிபர் தொலைக்காட்சித் திரையில் தோன்றுகிறார்.மறுநாள் மார்ச் 17 நண்பகலில் இருந்து நாடு முழுவதும் ஒருவித போர்க் கால யுகம் தொடங்க இருப்பதை அவர் அறிவிக்கிறார்.

"நாங்கள் ஒரு போரில் நிற்கின்றோம்" (Nous sommes en guerre-We are at war) அது அவருடைய முதலாவது வார்த்தை.

"இன்னொரு படையுடனோ இன்னொரு நாட்டுடனோ அல்ல. ஆனால் கண்ணு க்குத் தெரியாத ஓர் எதிரியுடன் போரில் இறங்கியுள்ளோம். முன்னேறிவருகின்ற அந்த எதிரிக்கு எதிராக நாங்கள் அணிதிரள வேண்டி ஏற்பட்டுள்ளது" -இவ்வாறு அதிபர் மக்ரோன் பிரகடனம் செய்கிறார்.

முன்னர் கேட்டு அறிந்திராத "confinement" என்ற சொல் புழக்கத்துக்கு வருகிறது. அதனை விளங்கிக் கொள்ளவும் தமிழில் அர்த்தம் தேடவும் தடுமாறிக் கொண் டோம். இந்திர ஜாலங்கள் நிறைந்த பாரிஸின் இரவு வாழ்வு அன்றோடு முடிவுக்கு வருகிறது. அனைத்தும் இழுத்து மூடப்படுகின்றன.வீடுகளுக்கு வெளியே ஓடித்திரியும் உல்லாசப் பயணமாக உணர்ந்த வாழ்க்கை சுவர்களுக்குள் அடங்குகிறது. விடிந்தால் இன்னுமொரு நாள். முற்றிலும் மாறிப் போன புதிய வாழ்வு ஒன்றின் தொடக்க நாள் அது.

கூடிக் குடித்து உணவருந்தி மகிழ்ந்த விருந்துகள் இழந்தோம். ஜன்னலுக்கு வெளியே கைகளைத் தட்டிய மாலைப் பொழுதில் மட்டும் அயலவரைக் கண்டோம்.

அன்றைக்குத் தொடங்கிய அவலங்களும் அன்றைக்கு உணர்ந்த நிச்சயம் இன்மை யும் ஓராண்டு கடந்து இன்னும் நீள்கின் றன.அன்புக்குரியவர்களை இழந்த துயரின் அழுகை ஓயவில்லை. ஆனால் இத்தனைக்கு மத்தியிலும் புதிதாகக் கண்டடைந்த வாழ்க்கை முறை ஒன்று இருகிறது.அதனைச் சிலர் "அற்புதமா னது" என்று உணர்கிறார்கள்.

தலைகால் தெரியாமல் தடுமாறி ஓடி இன்ப நாட்டமே நித்தியம் என்றிருந்த மனிதரை இழுத்து இருத்தி வைத்து வைரஸ் சொல்லிச் செல்லும் செய்தி என்ன?
கடந்த ஓராண்டு காலம் கற்பித்துச் சென்ற அனுபவங்களை எழுதுங்கள் என்று பாரிஸ் பத்திரிகை ஒன்று தனது வாசகர்களிடம் கேட்கிறது.

".. எங்களுக்கு வசதியாக எப்படி வாழ்வது என்பதை தெரிந்துகொண்டோம். சேமித்தோம். அவசியமானவற்றை மட்டும் வாங்கினோம். எங்கள் நகரங்க ளின் அகன்ற தெருக்களை நாங்கள் முதன் முறையாக கண்டோம். மிக மோசமான சூழ்நிலையிலும் எங்களிடம் வளங்களுக்கு குறைவிருக்கவில்லை...."
-இப்படி ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார்.

" நான் எனது நீண்டகால ஆசைகளில் ஒன்றான எனது சுய சரிதையை எழுதி முடித்தேன். விருப்பமானதைச் செய்ய இதைவிட இனி நேரம் அமையுமா.. "-என்று ஒருவர் பதிவிடுகிறார்.

" .... வேலையைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த காலம் மாறியது. கிராமத்துக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டேன். எனது சிறுபராயம் திரும்பக் கிடைத்த உணர்வு எனக்கு.." - என்று கூறுகிறார் இன்னொருவர்.

" ..விமானங்களைக் கண்டு சலித்த வானில் பறவைகள்...இவ்வளவு அருகே அவற்றின் பாடல்கள் கேட்டதில்லை. ஜன்னல் வரை வந்து வாசம் வீசிய காற்றை ஒருபோதும் நான் அனுபவித்ததில்லை. இயற்கைக்கு மிகக் கிட்டச் சென்ற உணர்வு....இந்த நாட்களில் உணர்ந்தேன்..."

"... எப்போதும் நள்ளிரவு தாண்டி வீடு வருகின்ற தந்தை இப்போது என் பக்கத்திலயே இருக்கிறார் என்று என் பிள்ளை கொண்ட மகிழ்ச்சி மறக்க முடியாதது.. "

இப்படிப் பலரும் தங்கள் அனுபவங்களை பதிவு செய்கிறார்கள்.இழந்தது என்ன, அடைந்தது என்ன? பொது முடக்க காலம் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் என்ன.. நீங்களும் எழுதுங்கள்..

இன்னமும் எதுவும் முடிந்துவிடவில்லை. நாடு மூன்றாவது வைரஸ் பேரலையை எதிர்கொள்கின்றது. சில தினங்களில் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கத் தயாராகிறார் மக்ரோன்.முதலாவது முடக்கத்தின் பரபரப்போ பதற்றமோ இன்றில்லை.

கைகுலுக்கலும் கட்டியணைத்தலும் இல்லாத வாழ்க்கை போல வைரஸுட னான வாழ்வும் பழக்கப்பட்டு விட்டது.
Previous Post Next Post