பிரான்ஸில் சூடுபிடிக்கிறது அதிபர் தேர்தல் களம்! எத்துவா பிலிப் மக்ரோனுக்கு ஆதரவு!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
2022 தேர்தலில் தற்போதைய அதிபர் எமானுவல் மக்ரோனுக்கே தனது முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக முன்னாள் பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்திருக்கிறார். மக்ரோனின் வெற்றிக்குப் பிறகு அவரது செயற்றிட்டங்களுக்கு ஆதரவாக அரசியல் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அதிபர் மக்ரோனது அரசாங்கத்தில் முதல் பாதிக் காலம் பிரதமராகப் பதவி வகித்து வந்தவர் எத்துவா பிலிப்(Edouard Philippe).

நாட்டின் வடக்கே Le Havre என்ற துறைமுக நகரத்தின் மேயராக இருப்பவர். பிரதமர் பதவிக் காலத்தில் மக்ரோனுக்குச் சமமாக மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கியவர்.மக்ரோனுடனான உறவில் சிறு விரிசல்கள் காரணமாக அவர் அதிபர் தேர்தலில் தனி வழி செல்லக்கூடும் என்று கருதப்பட்டது. 

அவரது நிலைப்பாடு மக்ரோனுக்குச் சாதகமாக இருக்காது என்று முதலில் நம்பப்பட்டது.ஆனால் அதற்கு மாறாக அவர் மக்ரோனுக்குத் தனது முழுமையான ஆதரவைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
இதேவேளை, அடுத்தடுத்துப் பல முக்கிய அரசியல் பிரபலங்கள் எலிஸேக்கான போட்டியில் களமிறங்கப் போவதை அறிவித்துவருவதால் தேர்தல் நிலைவரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பாரிஸ் நகரத்தின் சோசலிஸக் கட்சி மேயர் ஆன் கிடல்கோ நேற்று நடந்த ஒரு வைபவத்தில் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தன்னை அறிவித்திருக்கிறார்.

"நாட்டுக்கான பணிகளில் இருந்து நான் ஒருபோதும் தப்பிக்கவிரும்பவில்லை" என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இடது சாரிகள் பலர் போட்டிக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் சோசலிஸக் கட்சிக்கான வாக்குகள் சிதறுண்டு போகின்ற நிலைவரம் காணப்படுகிறது.

இதேபோன்ற நிலைமை வலதுசாரிகள் மற்றும் மைய வலதுசாரிகள் இடையிலும் காணப்படுகிறது. பலரும் தன்னிச்சையாகத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். இதனால் முக்கிய வலதுசாரி கட்சியான ரிப்பப்ளிக்கன் கட்சிக்குப் பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

சோசலிஸக் கட்சி மற்றும் ரிப்பப்ளிக்கன் ஆகிய இரண்டு பாரம்பரியக் கட்சிகளிலும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் என்று எவரும் இல்லை.பொது வேட்பாளராக ஒருவரைத் தெரிவு செய்வதில் இவ்விரு கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. பலரும் பல அணிகளாகப் பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுண்டு வெற்றி வாய்ப்பைப் பாதிக்கின்ற போக்கே தென்படுகிறது. இந்த நிலைவரம் அதிபர் மக்ரோனின் மீள் வெற்றிக்கே சாதகமாக அமையக்கூடும்.

பிரபல பத்திரிகையாளரும் அரசியலில் நுழைகிறார் தீவிர வலதுசாரிக் கருத்துடைய பிரபல பத்திரிகையாளர் எரிக் செமூர் (Eric Zemmour) இந்தமுறை அதிபர் தேர்தல் ஊடாக அரசியலில் நுழைகிறார் என்று அண்மைக்காலமாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

CNews தொலைக் காட்சியில் மிகப் பெரும் எண்ணிக்கையானவர்கள் பார்வையிடுகின்ற பிரபலமான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தவர்.அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இன்னமும் அவர் முறைப்படி அறிவிக்கவில்லை. 

ஆனால் அத்தகைய விருப்பம் தனக்கு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.தனது நிகழ்ச்சியில் தேசிய அரசியல் விவாதங்களுக்குப் பதிலாகத் தனது அரசியல் பிரவேசம் குறித்தும் எதிர்தரப்பைச் சாடும் வகையிலும் கருத்துகளை முன்வைத்த காரணத்துக்காக CNews தொலைக்காட்சி நிர்வாகம் அவரை வெளியேற்றிஉள்ளது.
 
கட்டுரை,தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் என நீண்டகாலம் ஊடக உலகில் பிரபலம் பெற்றவராக விளங்கிவருகின்ற எரிக் செமூர், தனது தீவிர வலதுசாரிக்
கொள்கைகளோடு மரீன் லூ பென்னைக் கடுமையாக விமர்சித்து வருபவர் ஆவார். 

அவரது தேர்தல் பிரவேசம் சாத்தியமானால் அதனால் நேரடியாகப் பாதிக்கப்படப்போகின்ற தரப்பு மரீன் லூ பென் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சியே ஆகும். எரிக் செமூரின் அரசியல் பிரவேசம் குறித்துக் கருத்துத் தெரிவித்த மரீன் லூ பென், "பிரான்ஸுக்கு ஒரு டொனால்ட் ட்ரம்ப் தேவையில்லை" எனக்கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் அதிபர் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன.
Previous Post Next Post