நோர்வேயில் ஆளுங்கட்சி தோல்வி! நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணப் பெண் தெரிவு!! (படங்கள்)


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
நோர்வேயில் எட்டு ஆண்டுகள் நீடித்த பழமைவாதிகளது ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. அங்கு எதிர்க்கட்சியாகிய தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது. தோல்வியை அடுத்து பிரதமர் எர்னா சொல்பேர்க்(Erna Solberg) பதவி விலகுகிறார். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்களில் தொழிற்கட்சி ஈடுபட்டுள்ளது.அதன் தலைவர் ஜோனாஸ் ஹார் ஸ்டோயர்(Jonas Gahr Stoere) புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

பதவி விலகும் பெண் பிரதமர் எர்னா சொல்பேர்க்கின் கட்சிஆட்சியில் இருந்து அகல நேர்ந்துள்ள போதிலும் அவர் ஒன்பதாவது தடவையாகவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிச் சாதனை படைத்துள்ளார்.
 
திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் தொழில் கட்சி தனி ஒரு கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ள போதிலும் தனித்து ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு ஆசனங்களை வெல்லவில்லை.

169 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் அக்கட்சி 48 ஆசனங்களையே வென்றுள்ளது.ஆளும் கட்சிக்கு 36 இடங்கள் கிடைத்துள்ளன. தனித்து 28 ஆசனங்களை வென்ற சோசலிஸ இடது சாரிக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஏனைய இடதுசாரிகளது ஆதரவுடன் தொழிற்கட்சி அரசாங்கத்தை ஜோனாஸ் ஹார் ஸ்டோயர் நிறுவவுள்ளார்.

வடகடல் எரிபொருள் வளம் காரணமாக உலகில் பெரும் செல்வந்த நாடாக விளங்கி வருகின்ற நோர்வேயில் இந்த முறை நாட்டின் எண்ணெய்த் தொழில் துறையும் பருவநிலை மாற்றமும் தேர்தல் பிரசாரங்களில் மைய விவாதத்துக்குரிய விடயங்களாக இருந்தன. நாட்டின் எரிபொருள் மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்தும் பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிப்பது பருவ நிலைப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக பசுமைக் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

தமிழ் யுவதியும் எம்.பியாகத் தெரிவு 

புலம் பெயர்ந்து நோர்வேயில் வசித்து வருகின்ற வெளிநாட்டுப் பூர்வீக இனங்களின் சார்பில் பலர் இந்த முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் பெண் ஹம்ஸி குணரட்ணமும் அவர்களில் ஒருவர். ஹம்சாயினி என்னும் இயற்பெயர் கொண்ட ஹம்ஸி ஒஸ்லோ நகரத்தின் துணை மேயராவார்.

தொழிற்கட்சி உறுப்பினரான அவர் நோர்ட்டிக் நாடு ஒன்றின் நாடாளுமன்றத்துக் குத் தெரிவாகிய முதல் தமிழ்ப் பெண் என்ற இடத்தைப் பெறுகிறார்.

மார்ச் 27, 1988 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஹம்ஸி, தனது மூன்றாவது வயதில் பெற்றோருடன் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார்.தனது இளவயதில் ஒஸ்லோவில் தமிழ் மற்றும் தொழிற்கட்சி இளையோர் அமைப்புகளில் இயங்கியவர்.

ஒஸ்லோ நகரின் தொழிற்கட்சி மேயர் ரேய்மொன்ட் ஜொஹான்சென் (Raymond Johansen) அவர்களது வழிகாட்டலில் தேசிய அரசியலுக்குள் நுழைந்தவர்.
 
2011 இல் நோர்வேயின் உத்தாயா(Utøya) தீவில் தொழிற்கட்சி இளைஞர் அணியின் விடுமுறைகால முகாமில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலையில் சுமார் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

அந்த இளைஞர் அணியில் இணைந்திருந்த ஹம்ஸி, கொலையாளியின் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மீண்டிருந்தார்.

நோர்வேயின் மொத்த சனத்தொகையில் 18.5 வீதமானோர் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் ஆவர். அவர்களில் பலர் அந்நாட்டின் தேசிய அரசியலில் இணைந்துள்ளனர். நோர்வேயின் கலாசார அமைச்சராக இருப்பவர் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.

(படங்கள் :தொழிற்கட்சித் தலைவர் ஜோனாஸ் ஹார் ஸ்டோயர் மற்றும் ஹம்சி குணரட்ணம்) 
Previous Post Next Post