பிரான்ஸில் ஒரே நாளில் அதிகூடிய தொற்று! இலவச பரிசோதனையை மீள ஆரம்பிக்கக் கோரிக்கை!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பொதுமக்கள் வசதியான நேரத்தில் விரும்பிய இடத்தில் வைரஸ் பரிசோதனையை இலவசமாகச் செய்து கொள்கின்ற வசதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். 

நாட்டில் தொற்றாளர்களது சரியான எண்ணிக்கையை விரைவாகக் கணிப்பிட அது உதவியாக இருக்கும் -இவ்வாறு தொற்று நோயியல் நிபுணர்கள் சிலர் கோரியிருக்கின்றனர்.

தடுப்பூசி ஏற்றாதவர்கள் மருத்துவரது பரிந்துரை இன்றியே தாங்களாக வைரஸ் பரிசோதனை செய்து தொற்றை அறிந்து கொள்கின்ற இலவச வசதிகளை அரசு கடந்த ஒக்ரோபர் 15 ஆம் திகதி முதல் நிறுத்தியது.நாட்டு மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஒரு முயற்சியாக அரசு அதனைச் செய்தது.

அதன்பிறகு தொற்றுப் பரிசோதனைகள் குறைந்தன. நாளாந்தம் எத்தனை பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சரியாகக் கணிப்பிடுவதிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போதைய கட்டணம் அறவிடும் நடைமுறைப்படி பிசிஆர் (PCR test) பரிசோதனைக்கு 44 ஈரோக்களும் அன்ரிஜன் சோதனைக்கு(antigen test) 22 ஈரோக்களும் செலுத்த வேண்டும்.

தொற்று அறிகுறிகளுக்கும் வைரஸ் பரிசோதனை செய்துகொள்வதற்கும் இடையே அதிக கால இடைவெளி இருக்கக் கூடாது. நிதி நெருக்கடி, மருத்துவரது ஆலோசனை பெறல் என்று பல காரணங்களால் தற்போது பலரும் தங்களைச் சோதனைக்குட்படுத்தப் பின்னிற்கின்றனர். இது தொற்றுப் பரவலை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். -இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

தற்சமயம் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. எனவே இலவச பரிசோதனை வசதிகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

பொது முடக்கத் திட்டங்கள் எதுவும் உடனடியாக அமுலுக்கு வரமாட்டா!

இதேவேளை, நாடு முழுவதும் நேற்றுப் பதிவாகிய ஒரு நாள் தொற்றாளர்களது எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி ஒன்றுக்குச் செவ்வி அளித்த அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால், "உடனடியாகவோ, அண்மைய நாட்களிலோ நாட்டில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

நாங்கள் முழு எச்சரிக்கையுடன் இருக் கின்றோம். அவசியமானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுவதை முடுக்கி விட்டுள்ளோம். மருத்துவமனை அனுமதிகள் மிக குறைந்த எண்ணிக் கையில் அதிகரித்துள்ளன. 

இந்தக் கட்டத்தில் நாட்டை முடக்கும் திட்டங்கள் பற்றி எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. தடுப்பூசி ஏற்றியோர்களது வீதம் அயல் நாடுகளை விட அதிகம். 

எனவே ஊசி ஏற்றாதவர்களுக்கு மட்டும் பொது முடக்கத்தை உத்தரவிடுகின்ற அவசியம் எமக்கு எழவில்லை - என்று அவர் தெரிவித்தார்.

பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (16.11.2021)

பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 11, 2021 வியாழக்கிழமை.
  • 47 பேர் மரணம்
  • 19,778 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,277 (+ 20) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 118,247
  • மொத்த தொற்றுக்கள்  7,310,664
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை   91,345 (24 மணி நேரத்தில் + 47) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,902  (+0) ஆகும்.
Previous Post Next Post