“எரிவாயுக் குழாயைத் துண்டிப்போம்” ஐரோப்பாவுக்கு பெலாரஸ் மிரட்டல்!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
தனது நாடு மீது புதிதாகத் தடைகளை விதித்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்லும் எரிவாயு இணைப்புகளைத் துண்டிக்கப் போவதாக பெலாரஸ் நாட்டின் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய விரும்பும் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகளை போலந்து எல்லைக்குள் தள்ளிவிடுகின்ற முயற்சிகளில் பெலாரஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால் எல்லையில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. குடியேறிகளை"ஆயுதமாகப்" பாவித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நெருக்கடி கொடுக்கும் விதமான பெலாரஸின் செயலுக்குப் பதிலடியாக அந்நாடு மீது மேலும் புதிய தடைகளை அறிவிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகின்றது.

குடியேறிகள் பெலாரஸ் வந்தடைவதைத் தடுக்கும் நோக்கில் தலைநகர் மின்ஸ்க்கில் (Minsk) உள்ள விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடை அறிவிப்புகள் வரும் திங்களன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை நெருக்கடி தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டப்படுகிறது.எனினும் ரஷ்யா வீற்றோ அதிகாரம் (veto-power) உள்ள நாடு என்பதால் பாதுகாப்புச் சபை எடுக்கக் கூடிய எந்தவிதமான தீர்மானங்களில் இருந்தும் பொலாரஸைப் பாதுகாக்கும்.
 
இந்த நிலையிலேயே எரிவாயுவைத் துண்டிப்போம் என்ற எச்சரிக்கையை பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ(Alexander Lukashenko) நேற்று விடுத்திருக்கிறார். 

ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எடுத்துவருகின்ற குழாய் இணைப்புகள் பெலாரஸ் நாட்டை ஊடறுத்துச் செல்கின்றன.

அந்த இணைப்புகளையே துண்டிக்கப் போவதாக பெலாரஸ் ஆட்சியாளர் மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்.

"நாங்கள் ஐரோப்பாவை சூடாக்குகின்றோம். அவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றார்கள். நாங்கள் எரிவாயுக் குழாய்களை நிறுத்தினால் என்ன நடக்கும்? போலந்து, லித்துவேனியா போன்ற வெற்று மண்டையர்கள் இதனை நினைத்துப்பார்க்க வேண்டும்.எங்கள் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாக்கும் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடப் போவதில்லை " -இவ்வாறு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
 
அவரது இந்த மிரட்டல் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயுவுக்கு உள்ள தட்டுப்பாடு மேலும் மோசமாகவும் விலைகள் அதிகரிப்பதற்கும் வழிகோலி விடுமோ என்ற புதிய அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
  • ரஷ்யா வழங்கும் எரிவாயுவை பெலாரஸ் துண்டிப்பது சாத்தியமா?
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தேவையான இயற்கை எரிவாயுத் தேவையில் எழுபது வீதமான பங்கை ரஷ்யா வழங்கி வருகிறது.எரிவாயுவை விநியோகிக்கின்ற இரண்டு பிரதான குழாய் மார்க்கங்கள் பெலாரஸ் நாட்டை ஊடறுத்து போலந்து வழியாக ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளை வந்தடைகின்றன.

சுமார் 2600 மைல் நீளமான குழாய் மூலம் வருகின்ற எரிவாயு ஜேர்மனியில் உள்ள பாரிய குதம் ஒன்றில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது.
 
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடான பெலாரஸின் அதிபரை ஐரோப்பிய நாடுகள் ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கின்றன. நீதியான தேர்தல்களை நடத்தாமல் நாட்டின் அதிகாரத்தை அடாத்தாகத் தனது பிடிக்குள் நீண்ட காலமாக வைத்திருப்பவர் அவர்.

ஆனால் அவர் எடுக்கின்ற முக்கிய நகர்வுகள் எப்போதும் மொஸ்கோவில் தான் தீர்மானிக்கப்படுகின்றன என்றுகூறும் அளவுக்கு அவர் ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியாக விளங்குகிறார்.

தற்போது எரிவாயுவைத் துண்டிக்கப்போவதாக அவர் விடுக்கின்ற அச்சுறுத்தலும் ரஷ்யாவை மீறிச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படவில்லை.

எனவே ரஷ்யா தனது எரிவாயு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடுக்கின்ற ஓர் எச்சரிக்கை போலவும் இதனைக் கருத முடியும்.

தங்கள் எல்லையில் திட்டமிட்டு அகதிகளைக் குவிக்கின்ற பெலாரஸை ரஷ்யா வழிப்படுத்த வேண்டும் என்று ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளது தலைவர்கள் கோரிவருகின்றனர்.
 
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பெலாரஸ் நாட்டுக்கும் இடையிலான பகைமையின் எதிரொலியாக குடியேறிகள் அங்கும் இங்குமாகப் பந்தாட்டப்படுகின்ற சம்பவங்கள் போலந்து, லித்துவேனியா எல்லையோரத் தடை வேலிப் பகுதிகளில் அண்மைக்காலமாக அடிக்கடி நடக்கின்றன.

மத்திய கிழக்கு, ஆசிய, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு வாய்ப்பான ஒரு முனையாக பெலாரஸ் மாறியுள்ளது.

பெலாரஸின் தலைநகர் மிங்க்ஸ் விமான நிலையத்துக்கு வந்து சேருகின்ற வெளிநாட்டுக் குடியேறிகள் அங்கிருந்து எல்லைப் பகுதிகளுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பியக் கனவுடன் வரு கின்ற அவர்களை பெலாரஸ் எல்லைக் காவலர்கள் வேலிகளுக்கூடாகத் தள்ளி விட்டு அயல் நாடுகளுக்கு அழுத்தத்தை உருவாக்குகின்றனர்.

குடியேறிகளில் பெரும்பான்மையானவர்கள் நாடிழந்த குர்திஷ் இனத்தவர் என்று கூறப்படுகிறது. இலங்கையர் ஒருவர் உட்பட குடியேறிகள் பலர் எல்லைகளில் உயிரிழந்தும் உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லையில் தோன்றியுள்ள இவ்வாறான அகதிகள் நெருக்கடி பெலாரஸுடன் ஓர் இராணுவ மோதலாக மாறக்கூடிய ஆபத்துக் காணப்படுவதாக எச்சரிக் கைகள் வெளியாகி உள்ளன.
Previous Post Next Post