பிரான்ஸ் பிரதமரின் இன்றைய அறிவிப்பு!


குமாரதாஸன். பாரிஸ்.
  • வருட இறுதி இன்னிசை நிகழ்ச்சிகள்வாண வேடிக்கைக்குத் தடை விதிப்பு
  • முந்திய ஊசிக்கும் மூன்றாவதுக்கும் நான்கு மாத இடைவெளியே போதும்
  • ஆஸ்பத்திரிப் பணியாளரது மேலதிக நேர வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம்
  • சுகாதாரப் பாஸை"தடுப்பூசிப் பாஸாக" மாற்றுவதற்கு விரைவில் சட்டம் வரும்
மக்களை வீடுகளுக்குள் முடக்கும் விதமான எந்த அறிவிப்புகளையும் அரசு விடுக்கவில்லை. ஆனாலும் பெரிய அளவில் ஒன்றுகூடுவதையும் விருந்துண்பதையும் தவிர்க்குமாறு அரசு நாட்டு மக்களிடம் கேட்டிருக்கிறது.

இதனை இன்றைய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் இறுதியில் அறிவித்த பிரதமர் ஜீன் காஸ்ரோ, டிசெம்பர் 31 அன்று வருட இறுதிநாளில் இன்னிசைக் களியாட்ட நிகழ்வுகளும் வாண வேடிக்கைக் காட்சிகளும் தடைசெய்யப்படுவ தாகவும் தெரிவித்திருக்கிறார்.

வருட இறுதி ஒன்று கூடல்களில் கலந்து கொள்வோர் முன்னதாகவே தங்களை வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது. வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டாம் என்று நகர சபைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் தனது உரையின் ஆரம்பத்தில் நாட்டில் வைரஸின் ஐந்தாவது அலைஅதன் உச்ச வேகத்துடன் பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றது.டெல்ரா திரிபை விடப் பரவும் தன்மை கூடிய புதிய ஒமெக்ரோன் திரிபு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் பரந்து பீடிக்கும் என்று மதிப்பிடுவதாகத் தெரிவித்தார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி ஐந்து மாதங்களில் இருந்து நான்கு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டாவது ஊசி ஏற்றி நான்கு மாதங்கள் கடந்திருந்தால் வரும் ஜனவரி மூன்றாம் திகதி முதல் மூன்றாவது ஊசிக்கு விண்ணப்பிக்க முடியும்.மருத்துவமனைப் பணியாளர்களது மேலதிக நேரக் கடமைக்கான கொடுப்பனவுகள் அடுத்த வாரம் தொடக்கம் இரட்டிப்பாக வழங்கப்படும் -என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்சமயம் புழக்கத்தில் உள்ள சுகாதாரப் பாஸை (Pass sanitaire) தடுப்பூசிப் பாஸாக (Pass vaccinal) மாற்றுவதற்கான சட்ட மூலம் ஒன்றை விரைவில் அரசு நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும் என்ற தகவலையும் பிரதமர் இன்று அறிவித்தார்.

அதிபர் மக்ரோன் மாலி நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தைத் தொற்று நிலைவரம் மோசமடைந்துள்ள காரணத்தால் நிறுத்தியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.பிரதமரும் ஜோர்தான் நாட்டுக்கான தனது புத்தாண்டுப் பயணத்தைக் கைவிட்டுள்ளார்.
Previous Post Next Post