பிரான்ஸின் அழகிப் போட்டியில் பாரிஸ் பிராந்திய யுவதி வெற்றி! போட்டி விதிகளுக்கு எதிர்ப்பு!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
2022 ஆம் ஆண்டுக்கான பிரான்ஸின் அழகியாக பாரிஸ் இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் இருந்து போட்டியிட்ட டியான் லேயர் (Diane Leyre) வெற்றியீட்டியிருக்கிறார்.

பிரான்ஸின் 29 பிராந்தியங்களின் சார்பில் 18-24 வயதுக்கு இடைப்பட்ட இளம் அழகிகள் பங்குபற்றிய கண் கவர் இறுதித் தெரிவுப் போட்டி நேற்றிரவு நோர்மென்டி பிராந்தியத்தின் Caen துறை முக நகரில் நடைபெற்றது.
 
24 வயதும் 1மீ 77 உயரமும் கொண்ட பாரிஸ் அழகி டியான் லேயர் ஏற்கனவே சமூக ஊடகத் தளங்களில் பெரும் ஆதரவு பெற்ற போட்டியாளராக விளங்கினார். இறுதிப் போட்டியில் வென்ற அவர் 2021 ஆம் ஆண்டுக்கான அழகி அமன்டின் பெற்றியிடம் (Amandine Petit) இருந்து கிரீடத்தைப் பெற்றுக் கொண்டார்.

சர்வதேச வர்த்தகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்துள்ள டியான் லேயர் தற்சமயம் ரியல் எஸ்ரேட் விளம்பரத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றைய இறுதிப் போட்டியில் அடுத்த நான்கு இடங்களை முறையே Martinique (first runner-up) Alsace (second runner-up) Tahiti( 3rd runner-up) Normandie ( 4th run ner-up) பிராந்தியங்களின் அழகிகள் வென்றனர்.

அண்மைக்காலமாக பிரான்ஸின் அழகித் தெரிவுப் போட்டிகள் பெரும் சர்ச்சைகள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. போட்டி விதிகள் தொடர்பாகப் பெண் உரிமை அமைப்புகளும் பாலின சமத்துவ உரிமைச் செயற்பாட்டாளர்களும் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்றனர்.

போட்டியாளர்களது உடல் உயரம் ஒரு மீற்றர் 70 செ. மீற்றர் என்ற அளவுக்கு மேற்பட்டவர்களே அழகிப் போட்டியில் பங்கேற்க முடியும் என்பது முக்கிய விதிகளில் ஒன்றாகஉள்ளது.

ஆண்-பெண் சமத்துவத்துக்கான அமைச்சர் அழகிப் போட்டியாளர்களைச் சந்தித்த சமயம் போட்டியின் விதிகள் "கண்மூடித்தனமானவை,"" காலாவதியானவை "என்று கண்டித்திருந்தார். போட்டியார்களான பெண்களைப் "பரிணாம வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்க விரும்புவதாகவும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தைப் பாதுகாப்பதற்கு ஊடக வெளிப்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் எலிசபெத் மோரேனோ (Elisabeth Moreno) கூறியிருந்தார்.
 
அழகியாகத் தெரிவு செய்யப்பட்ட டியான் லேயர் போட்டி முடிவில் கருத்து வெளியிடுகையில்," ஒரு பெண்ணாக நான் பிரான்ஸின் அழகியாகவும் பெண்ணியவாதியாகவும் இருக்க முடியும் என்பதைக் காட்ட விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை பெண்ணியம் என்பது நான் விரும்பியதைச் செய்யும் முடிவைக் கொண்டிருப்பது ஆகும்" - என்று தெரிவித்தார்.

போட்டி விதிகளைத் தளர்த்துவதற்கான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன என்ற தகவலை அழகிப் போட்டிகளை நடத்தும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கிறார்.
Previous Post Next Post