பிரான்ஸில் தொற்று வேகம் இப்படியே நீடித்தால் உணவுப் பொருள்களின் விநியோகம் தடைப்படும் அபாயம்?


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் ஒமெக்ரோன் வைரஸ் தொற்று தற்போதைய கணக்கில் லட்சங்களாகத் தொடர்ந்து நீடித்தால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களது விநியோகங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுமா? இது தொடர்பாக ஆராய்கின்ற கூட்டம் ஒன்று திங்கட்கிழமை நிதி அமைச்சில் (Bercy) இடம்பெறவுள்ளது.

விவசாயம், போக்குவரத்துத் துறை அமைச்சுக்களது அதிகாரிகள் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் உணவு விநியோகங்களது தற்போதைய நிலைமை என்ன,பாதிப்புகள் ஏதும் உண்டா என்று விவசாய அமைச்சரிடம் செய்தி ஊடகங்கள் வினவியுள்ளன. "இல்லை. உடனடியாக எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனாலும் நிலைவரத்தை ஆராய்வதற்காக எதிர்வரும் திங்களன்று சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இது பற்றிக் கலந்துரையாடவுள்ளோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தொற்றினாலும் தொடர்பினாலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்குவது சேவைகளையும் விநியோகங்களையும் ஸ்தம்பிக்கச் செய்துவிடக் கூடும் என்று சுகாதார அறிவியலாளர் குழு ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது.
  • முதலாவது ஊசி ஏற்றுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது
பிரான்ஸில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெளியான தரவுகளின் படி 24 மணி நேரத்தில் உறுதிசெய்யப்பட்ட தொற்று எண்ணிக்கை இரண்டாவது நாளாக மூன்று லட்சத்தைத்(328,214) தாண்டியுள்ளது. 436 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சுகாதாரப் பாஸைத் தடுப்பூசிப் பாஸாக மாற்றுவதை அனுமதிக்கின்ற சட்ட மூலம் இரவிரவாக நடந்த விவாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

தடுப்பூசிப் பாஸை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர அரசு எதிர்பார்த்துள்ளது. அதன் பிறகு அது ஒருவரது நாளாந்த வாழ்வின் பல நடவடிக்கைகளுக்குக் கட்டாயமாக மாறிவிடும். உணவகம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு ஒருவர் தொற்றற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு தொற்றுப் பரிசோதனை செய்த சான்றிதழைப் பயன்படுத்துவது அத்தோடு நிறுத்தப்பட்டுவிடும். பூரணமாகத் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாக இருக்கும்.

தடுப்பூசிப் பாஸ் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்தும், ஊசி ஏற்றாதவர்களுக்கு எதிராக அதிபர் மக்ரோன் தெரிவித்த காட்டமான கருத்துக்களின் பின்பும் நாட்டில் முதலாவது தடுப்பூசி ஏற்றுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுகாதார அமைச்சரும் உறுதிப்படுத்தி உள்ளார். 

20 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 2லட்சத்து 30 ஆயிரம் பேர் கடந்த வாரம் தங்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். சுகாதார அமைச்சர் அதனை வரவேற்றுள்ளார்.
Previous Post Next Post