பிரான்ஸில் குரங்கு அம்மை: மேலும் இருவர் அடையாளம்!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
உலகின் பல நாடுகளில் குரங்கு வைரஸ் பரவி வருகிறது. சில தசாப்தங்களுக்கு முன்பு உலகுகிற்கு அறிமுகமாகிய இந்த வைரஸ் கிரிமியைக் கட்டுப்படுத்தத் தனியான தடுப்பு மருந்து எதுவும் கிடையாது.

பெரியம்மை (Smallpox) என்கின்ற வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியே குரங்கு வைரஸ் நோய்ச் சிகிச்சைக்கும் பயன்பாட்டில் இருந்து வந்தது.

பல நாடுகளிலும் புழக்கத்தில் இருந்து மறைந்து விட்ட அந்தத் தடுப்பூசியை மறுபடியும் பெரும் தொகையில் தயாரித்துக் கையிருப்பில் வைத்திருக்கவேண்டிய அவசியம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது.

வழமையாக சில ஆபிரிக்க நாடுகளில் மட்டும் உள்ளூர் தொற்று நோயாக இருந்துவந்த குரங்கு அம்மை பிரான்ஸ் உட்பட 14 க்கும் மேற்பட்ட நாடுகளில்
பரவியுள்ளது.

பெருந்தொற்றுக்கான ஆரம்ப நிலை என்று எண்ணத்தக்க விதமாகத் தொற்றுக்கள் வழமைக்கு மாறான அதிகரிப்பைக் காட்டுவதால் உலக சுகாதார நிறுவனம் இது விடயத்தில் உஷாரடைந்துள்ளது.

பிரான்ஸில் முதலாவது தொற்றாளர் இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில்
கண்டுபிடிக்கப்பட்டார். 29 வயதுடைய அந்த ஆண், குரங்கு அம்மை பரவுகின்ற எந்த நாட்டுக்கும் அண்மையில் பயணம் செய்திருக்கவில்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

நாட்டில் தற்சமயம் மேலும் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுச் சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.

காய்ச்சல், சொறி கடி, உடலில் கொப்பளங்கள் என்று 21 நாட்கள் நீடிக்கும் இந்த அம்மைத் தொற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாமல் குணமாகிவிடக்கூடியது.

ஆனால் பலவீனமான உடல்சக்தி உள்ளவர்கள், கருவுற்ற தாய்மார் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளுக்கு இதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

தொற்றாளர்கள் 21 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதைக்
கட்டாயமாக்கும் விதிகளை பெல்ஜியம் நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
Previous Post Next Post