2022 ஓஎல் பரீட்சையை ஏப்ரலில் நடத்துவதில் சிக்கல்!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தின் பின்னர் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், அடுத்த வருடம் ஏப்ரலில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை நடத்த எதிர்பார்த்தாலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதன் காரணமாக மேலும் தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டு டிசெம்பர் 18ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு தேசிய பரீட்சைகளுக்கு இடையில் குறைந்தது மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதால், அடுத்த வருடம் ஏப்ரலில் திட்டமிட்டபடி க.பொ.த சாதாரணதரப் பரீட்சையை நடத்த முடியாது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டுக்குள் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பரீட்சை கால அட்டவணையை வழமைக்கு கொண்டு வருவதற்கு தாங்கள் நம்புவதாக கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, இவ்வருடத்திற்கான இரண்டாம் பாடசாலை தவணை டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி நிறைவடையும் எனவும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் டிசெம்பர் 5ஆம் திகதி திறக்கப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான பாடசாலை நாள்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
Previous Post Next Post