பிரான்ஸில் வாழும் சிறுமியின் திடீர் மன மாற்றம்! யாழில் சிறுவர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

யாழ்.உரும்பிராயைப் பூர்வீகமாகக் கொண்டவரும், பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவருமான ராஜேந்திரா ஆதிரா தனது ஒன்பதாவது பிறந்தநாள் வைபவத்தை உரும்பிராய் வடக்கு மடத்தடியில் இயங்கி வரும் Jaffna New Family Restaurant(Pvt) Ltd நிறுவனத்தின் ‘பசிக்கு உணவளிப்போம்’ திட்டத்தின் ஊடாக ஊரெழுவில் அமைந்துள்ள அக்சிலியம் சிறுவர் இல்லப் பிள்ளைகளுடன் இணைந்து நேற்று சனிக்கிழமை(19.11.2022) கொண்டாடியுள்ளார்.

மேற்படி பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் குறித்த சிறுவர் இல்லப் பிள்ளைகளுடன் இணைந்து கொண்டாடுவதற்குச் சிறுமியின் திடீர் மனமாற்றமே காரணமாகும்.

ஆதிரா கடந்த மாத இறுதியில் தனது பெரியப்பாவுடன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். ஊரெழுவில் இயங்கி வரும் மேற்படி சிறுவர் இல்லப் பிள்ளைகளின் நிலமையை அறிந்து அவரது பெரியப்பா இரவுநேர உணவினை வழங்கியிருந்தார். அப்போது குறித்த சிறுமியும் பெரியப்பாவுடன் அங்கு சென்று பார்வையிட்டிருந்தார்.

அங்கு தங்கியிருந்த சிறுமிகளைப் பார்வையிட்ட பின்னர் கனத்த மனத்துடன் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குத் திரும்பியிருந்தார்.அங்கு தனது தாய், தந்தையரிடம் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இங்கு ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாள் வைபவத்தைச் சிறப்பாகக் கொண்டாடுறோம். ஆனால், ஊரெழுவில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ள அக்காமாரை நான் பாரத்தனான். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனது பிறந்தநாளை இந்த வருடம் சிறப்பாகக் கொண்டாட வேண்டாம். நிதியை அனுப்பி அக்காமாருடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் எனத் தனது ஆத்மார்த்த ரீதியாகக் கூறி உள்ளார்.

இதற்கமைய ஆதிராவின் பிறந்தநாள் வைபவம் இன்று இரவு-7.15 மணியளவில் ஊரெழு அக்சிலியம் சிறுவர் இல்லத்தில் மேற்படி சிறுவர் இல்ல நிர்வாகி அருட்சகோதரி செ.மெட்டில்டா தலைமையில் எளிமையாக இடம்பெற்றது.

குறித்த பிறந்தநாள் நிகழ்வில் ஆதிராவும், குடும்பத்தினரும் தொலைபேசியில் காணொளித் தொழில்நுட்பத்தின் வழியாக இணைந்திருந்தனர். அத்துடன் ஆதிராவின் நெருங்கிய உறவினர்கள் சிலர் நேரடியாகவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சிறுவர் இல்லப் பிள்ளைகள் அனைவரும் இணைந்து ஆதிராவுக்கு ஒருமித்த குரலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இதனைப் பார்த்து ஆதிரா மிகவும் மனமகிழ்வடைந்தார்.

மேற்படி சிறுவர் இல்லப் பிள்ளைகள் பிறந்தநாள் கேக் வெட்டியதுடன் அனைவருக்கும் கேக் உள்ளிட்ட சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. அத்துடன் இரவு நேரப் போசணமும் வழங்கப்பட்டது.

இதேவேளை, அக்சிலியம் சிறுவர் இல்லத்தில் 45 ஆதரவற்ற சிறுமிகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post