யாழில் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியதால் மின்சாரசபை சேவை நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல்!

இலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு அறிவித்தல் (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சாரசபை சேவை நிலையத்திற்கு சென்ற நபர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மின்சார கட்டணம் செலுத்தாத நிலையில், கட்டணம் செலுத்துமாறு கோரி மின்சார சபையிடம் இருந்து சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

அதனை அடுத்து அவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (06) தனக்கு அனுப்பப்பட்ட சிவப்பு அறிவித்தல் தொடர்பில் , வட்டுக்கோட்டையில் உள்ள மின்சாரசபையின் சேவை நிலையத்திற்கு சென்று அங்கிருந்த மின்சார சபை ஊழியர்களுடன் முரண்பட்டுள்ளார்.

அதன்போது, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அவரை வெளியேற்ற முற்பட்ட வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post