தென்கொரியாவில் இராணுவச் சட்டம் திடீரெனப் பிரகடனம்! நாடாளுமன்றம் முடக்கப்பட்டது!!

தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) நாட்டில் அவசரகால இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளார். ஆச்சரியமளிக்கும் விதமாக இன்று பின்னிரவு தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய அவர், வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளிடமிருந்தும் அரசுக்கு எதிரான சக்திகளிடமிருந்தும் தேசத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னகர்வு இது என்று அறிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் உரை வெளியாகிய சிறிது நேரத்தில் நாட்டின் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படுவதாக இராணுவத் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இராணுவச் சட்டத்தை அமுல் செய்வதற்கான நடவடிக்கைகளில் படையினர் இறங்கியுள்ள நிலையில் தலைநகர் சியோலில்(Seoul) பதற்ற நிலை தோன்றியுள்ளது. மக்கள் பொருள்களை வாங்குவதற்கு முண்டியடித்து வருகின்றனர். நகரின் மேலாகக் ஹெலிக்கொப்ரர்கள் பறக்கின்ற சத்தத்தைக் கேட்க முடிவதாக நகர வாசிகள் கூறியிருக்கின்றனர்.

தமது ஆதரவாளர்களை நாடாளுமன்றத்தை நோக்கி அணி திரளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். சியோலில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் அருகே பெரும் சனக் கூட்டம் காணப்படுவதாக செய்திகள் வருகின்றன. அதேசமயம் கட்டடத்தின் உள்ளே இராணுவம் புகுந்துள்ளது.

உள்நாட்டு அரசியல் நெருக்கடியா அல்லது வட கொரியாவுடனான பதற்றமா? உண்மையில எதற்காக இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதில் குழப்பம் நிலவுவதாகச் சியோலில் உள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஜனாதிபதியின் கட்சியாகிய மக்கள் சக்திக் கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே அடுத்த ஆண்டின் வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக இணக்கமின்மை, இழுபறிகள் நிலவுகின்ற பின்னணியிலேயே நாட்டில் திடீரென இராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரில் வட கொரியப் படைகள் களமிறங்கியுள்ள நிலையில் கொரியத் தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருவது தெரிந்ததே.

நன்றி :குமாரதாஸன் (பாரிஸ்)
Previous Post Next Post