பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19! குளிர்காலக் காய்ச்சலுடன் சேர்ந்து இரட்டை நோய்த் தொற்று அபாயம்!!

பிரான்சில் தற்போது கோவிட்-19 (Covid-19) வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியை விட இந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் வைரஸ் பரவல் மிக அதிகமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குளிர்காலம் நெருங்குவதால் கோவிட்-19 மற்றும் சாதாரணக் காய்ச்சல் (Grippe) ஆகிய இரண்டு நோய்த் தொற்றுகளும் ஒருசேரத் தாக்க வாய்ப்புள்ளதா என்ற மக்களின் கேள்விக்கு, தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (CNRS) மருத்துவ ஆய்வாளர் டாக்டர் பிரான்சுவா ட்ரொட்டெய்ன் (François Trottein) விளக்கமளித்துள்ளார். இரண்டு வைரஸ்களும் ஒரே நேரத்தில் ஒருவரைத் தாக்குவதற்கான (Co-infection) முழுமையான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸானது காலப் போக்கில் வீரியம் குறைந்ததாக மாறியிருந்தாலும், உலக சுகாதார அமைப்பால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் ஒமிக்ரான் (Omicron) குடும்பத்தைச் சேர்ந்த 'ஸ்ட்ராடஸ்' (XFG - Stratus) மற்றும் 'நிம்பஸ்' (NB.1.8.1 - Nimbus) போன்ற புதிய வகைத் தொற்றுகள் தற்போது பிரான்சில் பரவலாகக் காணப்படுகின்றன. 

இந்தக் குளிர்கால நோய்த்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, முதியவர்கள், நாட்பட்ட நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த அக்டோபர் 13-ஆம் திகதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தொற்றைத் தவிர்க்க, வீடுகளைக் காற்றோட்டமாக வைத்திருப்பதுடன், அறிகுறி இருப்பவர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் போன்ற அடிப்படைச் சுகாதாரப் பழக்கங்களைத் தொடருமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கோவிட் மற்றும் குளிர்காலக் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்த்தொற்றுகளுக்கும் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, தலைவலி மற்றும் தசை வலி என ஒரே மாதிரியான அறிகுறிகளே காணப்படுவதால், பி.சி.ஆர் (PCR) பரிசோதனை மூலமே நோயைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

இதற்கிடையே, கடந்த 2025 மார்ச் 1 முதல் மருத்துவக் காப்பீட்டு நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதைச் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, மருந்தகங்களில் தனிப்பட்ட முறையில் வாங்கப்படும் சுயபரிசோதனைக் கருவிகள் (Autotests) மற்றும் ஆன்டிஜென் (Antigénique) பரிசோதனைகளுக்கான கட்டணத்தை இனி மருத்துவக் காப்பீடு (Assurance maladie) மூலம் திரும்பப் பெற முடியாது. 

எனினும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுடன் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு மட்டும் 60 சதவீதக் கட்டணம் காப்பீடு மூலம் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post