கிளிநொச்சி இளைஞனை காதலித்ததால் கடத்தி செல்லப்பட்ட முஸ்லிம் யுவதி! (படங்கள்)

கிளிநொச்சியிலிருந்து திருகோணமலைக்கு வான் ஒன்றில் கடத்தப்படவிருந்த இளம் யுவதி இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இராணுவச் சாவடியில் இன்று காலை 9.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் வானில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் தமிழ் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விடயம் சில மாதங்களுக்கு முன் பெண்ணின் வீட்டாருக்குத் தெரிய வந்துள்ளது. இதன்போது பெண்ணின் குடும்பத்தினருக்கிடையே சண்டைகள் இடம்பெற்றுள்ளது.

காதலுக்குப் பெற்றோரின் எதிர்ப்பால் குறித்த பெண் வீட்டுக்குச் செல்லாது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார்.

இன்று மதியம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த சிலர் பெண்ணை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றி திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பெண்ணை வலுக்கட்டாயமாக இழுப்பதனை அவதானித்த வைத்தியாசாலை நிர்வாகத்தினர் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினர் வவுனியா இராணுவ தலைமையகத்திற்கு தகவலை வழங்கி ஓமந்தை இராணுவ சாவடியில் குறித்த வானை மடக்கிப் பிடித்தனர்.

இதன்போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட ஒன்பது நபர்களை இராணுவத்தினர் பிடித்து அவர்கள் பயணித்த வாகனத்துடன் அவர்களை ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் பெண்ணின் உறவினர்கள் என தெரியவருவதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Previous Post Next Post