யாழ்.பல்கலையில் பகிடிவதை! இன்னுமொரு மாணவனுக்கும் இடைக்காலத் தடை!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மோசமான பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றுமொரு மாணவனுக்கும் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் புதுமுக மாணவர்களுக்கு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகிடிவதை தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநருக்கு நாளை கிடைக்கப் பெறும் எனவும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவித்தன. .

Previous Post Next Post