யாழ்.வீதிகளில் செத்துமடியும் மனித உயிர்கள்! யுத்த காலத்தை ஞாகப்படுத்துகிறது!! (படங்கள்)

யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புக்களைப் பார்க்கும் போது யுத்த காலத்தை ஞாபகப்படுத்துவதாக அமைகின்றது.

அந்தவகையில் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் வட பகுதி முன்னிலையில் உள்ளதென்பதை உணர முடிகிறது. விபத்து மரணங்கள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

கடந்த 23ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் நடந்த விபத்தொன்றில் காரைநகரைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர் என்பதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர் என்ற தகவல் எவராலும் தாங்க முடியாதது.

ஒருகணப் பொழுதில் நடந்த விபத்தில் ஐந்து பேர் மரணமடைவதென்பது யுத்தகால மரணங்களுக்கு ஒப்பானது.

இவ்வாறு வடபகுதியில் நாளுக்கு நாள் நடந்தேறும் விபத்து மரணங்களுக்குக் காரணம் என்ன என்று ஆராயும்போது, வேகக் கட்டுப்பாட்டுப்பாட்டை பின்பற்றாமை, நீண்டதூரப் பயணம் காரணமாக சாரதிகள் நித்திரையாகி விடுவது, இளம் பிள்ளைகள் வாகனத்தைச் செலுத்தும்போது நிதானமற்றுச் செயற்படுவது, விபத்து ஏற்படுத்தக்கூடிய பேரிழப்புகளைப் புரிந்து கொள்ளாமல் சாரத்தியம் செய்வது என்பன காரணமாக விபத்துக்கள் நடந்தேறுகின்றன.

அண்மைக்காலமாக வடபகுதியில் நடந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களைக் கடந்து விட்டது. எனினும் விபத்துக்களைத் தவிர்க்கவோ, குறைக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

விபத்து மரணங்கள் நாளுக்கு நாள் நடக்கின்றபோதிலும் இளைஞர்கள் சிலர் இன்னமும் மோட்டார் சைக்கிளை அதிவேகமாகச் செலுத்துவது, மோட்டார் சைக்கிள் ஓட்டத்தில் சாகசம் காட்டுவது என்பனவற்றைப் பார்க்கும்போது, இவர்கள் திருந்தவே மாட்டார்களா என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டம் உள்ளது.

இதுதவிர, தொலைபேசி கதைத்தபடி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் என ஏகப்பட்ட சம்பவங்கள் விபத்தை மலிதாக்குகின்றன.

இதுதான் என்றால் இல்லை, வடபகுதியில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸார் இலஞ்சம் வாங்குவதில் பேரம் பேசுகின்றனரே அன்றி சாரதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தண்டங்களை விதிப்பதாகத் தெரியவில்லை.

ஆக, மேற்போந்த விடயங்கள் அனைத்தும் சேர்ந்து மக்களின் உயிர்களைக் காவு கொள்கின்றன. எனவே விபத்தைத் தடுக்க விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது மிகவும் கட்டாயமானதாகும்.


Previous Post Next Post