யாழில் விபத்தில் காயமடைந்தவர் சாவு! வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல்!!

விபத்தொன்றில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி தெல்லிப்பளை வீதியில் கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது. எனினும் நேற்று வியாழக்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நடசேத்திரம் ஜொடிசன் அயன் (வயது-34) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர் உயிரிழந்தவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். மருத்துவ சேவையாளர் ஒருவருக்கு அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட பொலிஸார் அங்கு செல்வதற்குள் அடாவடியில் ஈடுபட்டோர் தப்பித்துள்ளனர். எனினும் பொலிஸார் துரத்திச் சென்று இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post