பிரதேச சபை உறுப்பினர்கள் -அங்கஜனுக்கிடையில் முறுகல்! வேலணையில் பரபரப்பு!! (படங்கள்)

வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கு, உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

தீவகப் பகுதியில் உள்ள மூன்று பிரதேச செயலகங்களை இணைத்து மூன்று பிரதேசங்களுக்குமான ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றஞ்சுமத்தி வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் வழிமறித்தனர். இதனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அங்கஜனுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எனினும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.
Previous Post Next Post