யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வந்த தொலைபேசி அழைப்பு! அதன் பின் நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தரிடமும் பண மோசடி நடந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் ஈசி காஸ் மூலம் 25 ஆயிரம் ரூபாயை கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதி போக்குவரத்து விதிமுறைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அவ்வேளை அவருடைய தொலைபேசிக்குத் தொடர்பு கொண்ட நபரொருவர் தன்னை யாழ்.மாவட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் என அறிமுகம் செய்து கொண்டு எனக்கு அவசரமாக 25 ஆயிரம் ரூபாய் பணம் தேவை. நீர் கடமையாற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கேட்டேன். அவர் நீர் தான் தற்போது வீதி போக்குவரத்து கடமையில் உள்ளதாகக் கூறினார். அவசரமாக எனக்குப் பணம் தேவையாக உள்ளதால் அருகில் எங்காவது ஈசி காஸ் மூலம் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு பணம் அனுப்பு என கூறியுள்ளார்.

அதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொலைபேசி இலக்கத்துக்கு பணத்தினை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியிடம் கூறியபோதே தான் ஏமாற்றப்பட்ட விடயம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு தெரிய வந்தது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக ஈசி காஸ் மூலம் மோசடியாகப் பணம் பெற்று வரும் சம்பவங்கள் அதிகரித்தச் செல்கின்றது.

அது தொடர்பில் பொலிஸாரிடம் கேட்டபோது,

இந்த மோசடி கும்பல்கள் பெருந்தொகை பணத்தினை மோசடி செய்வதனை தவிர்த்து 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மோசடி செய்கின்றனர். இவ்வாறான தொகைக்கு பெரும்பாலானவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்குத் தயக்கம் காட்டுகின்றனார். சிலர் முறைப்பாடுகள் செய்கின்றனர்.

அவர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் பதிவில்லாமல் இருக்கும். அல்லது சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களின் பெயர்களில் இருக்கும். அல்லது உயிரிழந்த நபர்களின் பெயர்களில் இருக்கும். அதனால் எமது விசாரணைகள் தடைப்பட்டு விடும்.

மோசடி நபர்களை நெருங்குவதில் தடைகள் உண்டு. அதேவேளை இவர்கள் மோசடியாகப் பெறும் பணத்தின் தொகை சிறியதாக இருப்பதனால் விசாரணைகளில் சில சிக்கல்கள் உண்டு.

இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே இவ்வாறான மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்க முடியும். தெரியாத நபர்கள், புதிய தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புக்களை நம்பி அவர்களுக்குப் பணம் செலுத்தாதீர்கள்.

அதேவேளை அதிஷ்டம் விழுந்துள்ளது என வரும் கநற்தகவல்கள் குறித்தும் கவனமாக இருங்கள். அவற்றை நம்பியும் பணம் செலுத்தாதீர்கள். அது தொடர்பில் விழிப்பாக இருங்கள். அவ்வாறான குறுந்தகவல்கள் குறித்து தொலைத்தொடர்பு வலையமைப்பின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அவர்களின் சேவை நிலையங்களுக்குச் சென்றோ உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தொலைபேசி ஊடாக மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்