யாழ்.பல்கலையில் பாலியல் தொல்லை! பொலிஸார் எடுத்த அதிரடி முடிவு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் தொலைபேசி ஊடான பாலியல் தொல்லைகள் குறித்த வழக்கை நீதிமன்றின் ஊடாக கொழும்பு குற்றவியல் விசாரணைத் திணைக்களத்துக்கு (சி.ஐ.டி.)மாற்றுவதற்கு கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வழக்கில் பதிக்கப்பட்ட தரப்பாக எவரும் முன்வராத நிலையில் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நுணுக்கமான விசாரணைகளை முன்னெடுக்க கிளிநொச்சி பெலிஸாரால் முடியாது என்பதால் மேற்கொண்டு விசாரணைகளை கொழும்பு குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலர் பகிடிவதை என்ற போர்வையில் புதுமுக மாணவிகள் சிலருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை ஏற்படுத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணைக்கு மேலதிகமாக குற்றச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தொழில்நுட்ப பீட நிர்வாகத்தால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அந்த முறைப்பாட்டில் குற்றச்செயல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டில் கோரப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் விவரங்கள் – தரவுகளை அவற்றின் இணைப்பு வழங்குனர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (பெப். 14) குற்றச்செயல் ஒன்று தொடர்பான அறிக்கையை (ஏ அறிக்கை) தாக்கல் செய்தனர்.

தொலைபேசி இலக்கங்களின் விவரங்கள் – தரவுகள் அறிக்கையை வழங்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ரி.சரவணபவராஜா, தொலைபேசி இணைப்பு வழங்குனர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த குற்றச்செயல் தொடர்பில் நுணுக்கமான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளதால் நீதிமன்றின் ஊடாக வழக்கை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வழக்கின் பி அறிக்கையைத் தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. பி அறிக்கையை நீதிமன்றில் முன்வைத்து மேலதிக நடவடிக்கையை கொழும்பு குற்ற விசாரணைத் திணைக்களத்துக்கு மாற்றம் செய்யுமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.
Previous Post Next Post