கனடாவுக்குள் புகுந்த ரஷ்ய போர் விமானங்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

கனடாவின் வான் பரப்பில் ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்கள் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அணுசக்தி ஏவுகணைகளை நீண்ட தூரத்திற்கு ஏந்திச் செல்லக் கூடிய ரஷ்ய விமானங்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை கனேடிய வான் பரப்பில் பறந்துள்ளமை தெரிய வந்துள்ளது.  இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு தொழில்நட்ப முறைமை காலாவதியாகிவிட்டதாக கனடாவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்த சில நாட்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு TU-160 பிளாக் ஜாக் குண்டுவீச்சு விமானங்கள் வட துருவத்தைக் கடந்து மேற்கு ரஷ்யாவிலிருந்து கனடா வான்பரப்புக்கு நுழைந்துள்ளன.

கனடாவின் வான் பாதுகாப்பு மண்டலம் வழியாக குண்டுவீச்சு விமானங்கள் பறந்தபோது அவற்கைக் கண்காணித்ததாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

எங்கள் விரோதிகள் தங்களது நீண்ட தூர ஆயுத அமைப்புகளை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என இதுகுறித்து நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை மையத்தின் அமெரிக்க தளபதி ஜெனரல் டெரன்ஸ் ஜே. ஓ ஷாக்னெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கனடாவின் விண்வெளி பாதுகாப்பு தொழில்நட்ப முறைமை காலாவதியாகிவிட்டதாக மிகச் சமீபத்தில் கனேடிய படை அதிகாரி கொமடோர் ஜேமி கிளார்க் எச்சரித்திருந்தார்.

வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை மையத்தின் துணை மூலோபாய இயக்குநராக அவர் உள்ளார். வட அமெரிக்க விண்வெளி பகுதிக்குள் அத்துமீறும் தொலைதூரம் பறந்து குண்டு வீசக் கூடிய விமானங்களை தற்போதுள்ள தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து அவற்றின் மீது விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவ முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை மையத்தின் முன்னெச்சரிக்கை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக கனேடிய மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் பல பில்லியன் டொலர் செலவுடைய இத்திட்டத்துக்காக இதுவரை நிதி ஒதுக்கீடுகள் எவையும் செய்யப்படவில்லை. வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை மையத்தின் கண்காணிப்பு தொழில்நுட்பம் கடைசியாக 1980-ஆம் ஆண்டுக்கு முன்னர் மேம்படுத்தப்பட்டது. 

எனினும் அமெரிக்கா 2000-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தனது வான்பரப்புக்குள் வரும் எதிரி நாட்டு விமானங்களைக் கண்டறிந்து ஏவுகணைகளை ஏவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இணைத்துக்கொண்டது. 

இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை நிறுவ கனடா 2005 இல் முடிவு செய்தபோதும் அது இதுவரை நடைபெறவில்லை. இந்நிலையில் ரஷ்யாவும் சீனாவும் வட அமெரிக்காவை தூரத்திலிருந்து தாக்கக்கூடிய புதிய ஆயுதங்களை உருவாக்கி உருவாக்கி வருகின்றன.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அதி நவீன ஆளில்லா தாக்குதல் விமானங்கள், மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யாவும் சீனாவும் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post