இத்தாலியில் ஒரே நாளில் 475 பேரை பலியெடுத்தது கொரோனா!

கோரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்இ 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் இத்தாலியில் வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்குத் தடை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள் தவிர்த்து பிற பொருள்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.

இத்தாலியில் மட்டும் இதுவரை 24 ஆயிரத்து 747 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அந்த நாட்டில் ஆயிரத்து 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வத்திகானும் கடுமையான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வத்திகானில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

எனினும் இத்தாலியில் கோரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 978 ஆக அதிகரித்து இருக்கிறது. 35 ஆயிரத்து 713 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post